காயல் ; விமர்சனம்

 

ஐசக், அனுமோல் தம்பதியின் மகள் காயத்ரி. தாய் தந்தை இல்லாத ஜாதி என்னவென்று தெரியாத லிங்கேஷை காதலிக்கிறார். போலீஸ் அதிகாரி என்றாலும் மகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவர் என்பதால் அவரது காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார் தந்தை ஐசக். ஆனால் அம்மா அனுமோல் ஜாதி பார்ப்பதால் தனது அண்ணன் மகனுக்கு காயத்ரியை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

ஒரு சென்டிமென்ட் காரணமாக காதலைத் துறந்து, அம்மாவின் விருப்பப்படி திருமண வாழ்க்கையில் நுழைகிறார் காயத்ரி. திடீரென ஒரு நாள் காயத்ரி தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என தகவல் வருகிறது. மகளின் வாழ்க்கையை தன் மனைவியே சீரழித்து விட்டதாக கோபம் கொண்டு மனைவியை பிரிய நினைக்கிறார் ஐசக். அனுமோலும் மகளின் பிரிவால் சற்றே மனநலம் பாதிக்கப்படுகிறார்.

இவர்களின் மகன் மற்றும் மனோதத்துவ டாக்டர் ரமேஷ் திலக், இறுதியாக லிங்கேஷ் ஆகியோர் சேர்ந்து இவர்களை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

ஒரு கதையில் ஃப்ளாஷ்பேக் என்பது இடைவேளைக்கு முன்போ அல்லது பின்போ இருக்கும்.. அல்லது இரண்டு முறை கூட வரலாம்.. இந்த படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என படம் முழுவதுமே அடிக்கடி மாறிமாறி வருவது, காட்சிகள் முழுவதுமே தண்ணீரின் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பது என பல விஷயங்கள் புதிதாக முயற்சி செய்து பார்த்துள்ளார் இயக்குனர் தமயந்தி.

படத்தின் கதாபாத்திரங்களுக்காக இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் நடிகர்கள் அத்தனை பேருமே மிகச் சரியான பொருத்தம். ஒரு காலத்தில் வில்லனின் அடியாளாக பார்த்து வந்த ஐசக், இந்த படத்தில் பாசமுள்ள தந்தையாக தனது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக இருந்தும் மகளின் காதலுக்கு உதவ நினைக்கும் ஒரு தந்தையாக நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். மகளின் பிரிவால் அவர் வாடும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கின்றன.

மலையாள நடிகையான அனுமோல் நடிப்பு பற்றி சொல்லியா தெரிய வேண்டும் ? அவரும் ஒரு பாசமுள்ள தாயாக கணவன் மீது கொஞ்சம் வீம்பு கொண்ட மனைவியாக சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் நாயகன் லிங்கேஷ் கொஞ்சம் அண்டர்பிளே செய்து நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்பதால் தேவையான இடங்களில் காதல், சோகம், கொஞ்சம் காமெடி என கலவையான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்,

ஆரம்பத்தில் முதல் காட்சியிலேயே இறந்து போவதாக காட்டப்படும் காயத்ரி கிளைமாக்ஸ் வரை விட்டுவிட்டு தொடர்ந்து பல காட்சிகளில் வருவதால் அவர் இறந்தது போலவே படத்தில் தெரியவில்லை. அவருக்கும் இது புது அனுபவமாக இருந்திருக்கும்.

அதேபோல லிங்கேஷை விரட்டி விரட்டி காதலிக்கும் ஸ்வாகதாவுக்கும் ஒரு நல்ல ஜாலியான கதாபாத்திரம். ரசித்து செய்திருக்கிறார். மனோதத்துவ டாக்டராக ரமேஷ் திலக் பண்பட்ட நடிப்பு.

தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவாளர் கார்த்திக்கை முதலில் சொல்லலாம். பல காட்சிகள் பருந்து பார்வையில் கடல், ஏரி, ஆறு என தண்ணீர் பின்னணியை அப்படியே கண்கள் முழுவதும் அள்ளி நிறைக்கிறார். படம் முழுவதும் தண்ணீருக்குள்ளேயே நாம் இருப்பது போன்ற ஒரு இதமான உணர்வு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நமக்கு ஏற்படுகிறது.

மென்மையான இந்த காதல் கதைக்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் மயிலிறகால் வருடுவது போல பாடல்களை கொடுத்திருக்கிறார். பெண் இயக்குனர் என்பதாலோ என்னவோ ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார். அதே சமயம் ஒரு ஆணின் பார்வையில் தந்தையின் அன்பையும் காதலனின் அன்பையும் கூட அவர் கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இருந்தாலும் அவ்வளவு போராட்ட குணம் கொண்ட பெண்ணான காயத்ரி தனது அப்பாவின் சப்போர்ட் இருந்தும் அம்மா சென்டிமென்டில் தனது காதலை கைவிடுவாரா என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல காயத்ரி இறந்ததற்கு என்ன காரணம் எனவும் தெளிவாக சொல்லப்படவில்லை. அவர் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை என்பதாலோ என்னவோ இயக்குனர் அந்த ஏரியாவை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆணவக் கொலை, ஜாதி பாகுபாடு என்கிற பேரில் அடிதடி, வன்முறை படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் மென்மையான காதலுக்குள் ஜாதி புகுந்து எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை மென்மையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading