துடிப்புமிக்க இளம் காவல்துறை அதிகாரி ஆதித்ய மாதவன். ஆளில்லாத காட்டுப்பகுதியில் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி மூன்று பெண்கள், ஒரு ஆண் இறந்த வழக்கு ஒன்றை அவர் கையாளுகிறார், அதில் இறந்த பெண்கள் யார் என்று தேடும் முயற்சியில் இறங்குகிறார்,
இன்னொரு பக்கம் அவரது காதலி கௌரி கிஷன் பிரபல மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கே மருத்துவ ரீதியாக ஒரு தவறு நடைபெறுகிறது. அதை கண்டுபிடிக்கும் கௌரி கிஷன் அதை ஆதித்ய மாதவனிடம் சொல்கிறார். ஆதித்யா துப்பறிந்து கொண்டிருக்கும் வழக்கும் இந்த விஷயமும் ஒரே கோட்டில் சந்திக்கின்றன.
இந்த மூன்று பெண்கள் மரணத்தில் உள்ள மர்மம், மருத்துவமனையில் நிகழும் விபரீதம் இரண்டுக்கும் பின்னணியில் சூத்திரதாரியாக இருக்கும் ஒரு முக்கிய நபரை கண்டுபிடிக்கிறார் ஆதித்ய மாதவன். அவரை நெருங்கி செல்லும்போதுதான் அந்த நபரை பற்றிய அதிர்ச்சியும் ஆச்சரியமான உண்மையும் இந்த மரணங்களுக்கும் மருத்துவமனை விபரீதத்திற்கும் காரணமான வித்தியாசமான பின்னணியும் தெரிய வருகிறது.
அது என்ன ? யார் அந்த நபர் ? எதற்காக இதை செய்தார் ? ஆதித்யாவால் அவரை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்ததா என்பது மீதி கதை.
தமிழ் சினிமாவில் ஒரு இளம் ஹீரோ முதல் படத்திலேயே அறிமுகமாகி அவர் பல வருடங்களுக்கு சினிமாவில் நீடிப்பது என்பது அரிதான விஷயம். எப்போதோ ஒரு ஹரிஷ் கல்யாண், மணிகண்டன், பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் தான் அத்தி பூத்தாற்போல உருவாகிறார்கள். அந்த பட்டியலில் தனது முதல் படமான இந்த அதர்ஸ் படம் மூலம் தரமான ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டார் என முத்திரை பதித்திருக்கிறார் இளம் ஹீரோ ஆதித்ய மாதவன்.
பார்க்க நிவின்பாலி போல அவ்வளவு அழகாக இருக்கிறார். முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியாகவும் ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கும் வாய்ப்பும் அதை செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் அதிர்ஷ்டமும் இந்த படத்திலேயே ஆதித்யாவுக்கு கிடைத்திருக்கிறது. இயல்பான நடிப்பும் கம்பீரமும் அவருக்கு பக்கபலமாக கைகூடி வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு கதாநாயகிகளில் ஆதித்யாவின் காதலியாக வரும் கௌரி கிஷன் இந்த படத்தில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார். ஒரு டாக்டராக, ஒரு போலீஸ் ஆபீசரின் காதலியாக சாதாரணமாக வந்து செல்லாமல் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இனி கௌரி கிஷனை தேடி இன்னும் நல்ல வெயிட்டான கதாபாத்திரங்கள் வரும்.
நீண்ட நாளைக்கு பிறகு அஞ்சு குரியனை ஒரு போலீஸ் ஆபீஸராக பார்க்கும்போதே மனதிற்குள் ஒரு மலர்ச்சி ஏற்படுகிறது. கம்பீரமான உடல் மொழியுடன் படம் முழுவதும் அவர் வரும் காட்சிகள் நமக்கு எனர்ஜி ஏற்றுகின்றன. இறுதிக்காட்சியில் நமக்கு அதிர்ச்சி தருகிறார் அஞ்சு குரியன்.
அதேபோல நீண்ட நாளைக்கு பிறகு ராட்சசன் படம் போல நடிகர் முனீஸ் காந்த்திற்கு ஒரு கலகலப்பான நல்ல போலீஸ் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல இதுநாள் வரை காமெடி நடிகராக பார்த்து வந்த நண்டு ஜெகன் இந்த படத்தில் ஒரு புதிய பரிமாணத்தை நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் அவர் சரியாகவும் பொருந்தி இருக்கிறார்.
அதேபோல கதையில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் மலையாள நடிகர் மூர் உண்மையிலேயே பாராட்டப்பட கூடியவர். நடிப்பில் சற்று செயற்கைத்தனம் இருந்தாலும் கூட அது பெரிய அளவில் தெரியாதபடி அந்த கதாபாத்திரத்துடன் தன்னை பொருத்திக் கொண்டுள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, வையாபுரி உள்ளிட்டோரும் மிக பொருத்தமான தேர்வு என நிரூபித்திருக்கிறார்கள்.
ஆரம்பக் கட்சியிலிருந்து அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு நம்மை ஒரு பரபரப்பிலேயே வைத்திருக்கிறது. பாடல்களை குறைத்துக் கொண்டு பின்னணி இசையில் படத்தின் தீவிரத்தை உணர்ந்து பணியாற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். அதேபோல தான் பாந்தம் பிரதீனின் சண்டை காட்சிகள் படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ன்ட்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் அபின் ஹரிஹரன் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்று இருக்கிறார். நல்லவன் ஒருவன் வில்லனாக மாறுவதற்கு இதுவரை பல காரணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் நிஜம். அவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு கொடுத்த நியாயத்தை இந்த சமூகத்தில் மக்கள் அதுபோன்றவர்களுக்கு கொடுத்திருந்தால் இது போன்ற குற்றங்கள் நிகழாது என்பதை ஒரு நல்ல கருத்தாக சொல்லி இந்த படம் வெளியாகி இருக்கிறது.
ஒரு இன்வெஸ்டிகேஷன் ஆக்சன் திரில்லர் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும்.
Rating ; 3.75 / 5









Leave a Reply