கிரைம் கதை மன்னன் என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுத்தில் தினகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் ரேகை. ராஜேஷ் குமார் நாவலில் படிக்கும்போது ஏற்படும் விறுவிறுப்பை திரையில் பார்க்கும்போது கொண்டு வந்திருக்கிறார்களா ? பார்க்கலாம்.
ஒரே ஸ்டேஷனில் எஸ்ஐ ஆக பாலஹாசனும், கான்ஸ்டபிள் ஆக பவித்ரா ஜனனியும் பணியாற்றுகிறார்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு வேறு ஒருவருடன் பவித்ராவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. இந்த சமயத்தில் பாலஹாசன் ஊர்க்காவல் படை காவலராக சேர்த்து விட்ட, தனது தம்பியாக நினைக்கின்ற ஒருவர் திடீரென பாத்ரூமில் மூச்சு திணறி மரணம் அடைகிறார். இந்த வழக்கை பாலஹாசனும் பவித்ரா ஜனனியும் இணைந்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில் இறந்து போனவரின் கைரேகை போன்றே இன்னும் மூன்று பேருக்கு கை ரேகை இருக்கிறது என்று தெரிய வருகிறது.. அவர்களைப் பற்றி விசாரிக்கையில் அவர்களும் அதே தேதியில் மரணமடைந்து இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. எப்படி நான்கு பேருக்கு ஒரே மாதிரியான கைரேகை இருக்கும் ? ஒரே நாளில் அவர்கள் எப்படி மரணம் அடைய முடியும் என்கிற யூகிக்க முடியாத பின்னணியை கண்டுபிடிக்க விசாரணையை தீவிரப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் இதன் பின்னணி தெரிய வரும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
எஸ்ஐ பொறுப்புக்கு ஏற்ற கட்டுமஸ்தான உடல்வாகு, அழகான முகத்தோற்றம், எதார்த்தமான நடிப்பு என முதல் காட்சியிலிருந்து நம்மை கவர்ந்து விடுகிறார் நடிகர் பாலஹாசன். அவருக்கும் காதலியான பவித்ரா ஜனனிக்கும் இடையே ஏற்படும் ஊடல் கூடல், சீரியஸாக செல்லும் கதையில் சில்லென தூவும் ஒரு மழைத்துளியாக நம்மை நனைக்கிறது.
ஜாடிக்கேத்த மூடியாக லேடி கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் பவித்ரா ஜனனி. துருதுருப்பும், துடுக்குத்தனமான பேச்சும், ரொமான்ஸ் கலந்த பார்வையும் என மொத்த வெப் சீரிஸிலும் ரசிகர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் நடிப்பு விருந்து அளித்துள்ளார். இவரை தமிழ் சினிமா நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிண பரிசோதனை செய்யும் அரசு மருத்துவராக வினோதினி வைத்தியநாதன் கதை ஓட்டத்தில் இறுதியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு வேலையையும் செய்துள்ளார்.
இவர்களை தவிர ஒரு மிகப்பெரிய மருத்துவ நெட்வொர்க்கை அமைத்து மோசடி செய்யும் கும்பலாகவும் மற்றும் காவல்துறை அதிகாரிகளாகவும் நடித்த பலரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதால் கதையோட்டத்துடன் நம்மாலும் இணைந்து பயணிக்க முடிகிறது.
மகேந்திரா எம் ஹென்றியின் விறுவிறுப்பான ஒளிப்பதிவும் கிரைம் திரில்லருக்கே உண்டான திகில் ஊட்டும் ராஜ் பிரதாபின் பின்னணி இசையும் மொத்த எபிசோடுகளையும் தொய்வு ஏற்படாமல் பக்கபலமாக தாங்கி பிடித்திருக்கின்றன.
ராஜேஷ்குமார் நாவல்களில் அடுத்து என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாது. அதேபோல எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும். அப்படி நாவலில் படித்த உணர்வை இந்த வெப் சீரிஸில் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு திடுக்கிடும் திருப்பம் என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினகரன்.
ராஜேஷ்குமார் உச்சகட்ட காலத்தில் இருந்த சமயத்தில் திரையுலகம் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த வெப் சீரிஸ் இனி அவரை தமிழ் சினிமாவில் பிஸியான கதாசிரியராக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
ரேகை ; ரசிகர்கள் மனதில் அழியாமல் இடம்பிடிக்கும்
ரேட்டிங் ; 4.25/5









Leave a Reply