Friday ; விமர்சனம்

 

ரவுடியிச கதைகளை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அதில் கதைக்களம் மற்றும் ரவுடியிச பின்னணியில் புதிய மாறுதல்களை கொடுக்கும்போது அந்த படம் கவனம் ஈர்க்கும். அப்படி ஒரு படமாக தான் இந்த ஃப்ரைடே வெளியாகி இருக்கிறது.. ரசிகர்களின் கவனம் ஈர்க்குமா ? பார்க்கலாம்.

ஊரில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவர் மைம் கோபி. ஆனால் அவருக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் இன்னொரு ரவுடியை போட்டுத்தள்ள அவரிடம் அடியாட்களாக இருக்கும் அனீஸ் மாசிலாமணி, கேபிஒய் தீனாவும் சேர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆனால் ஸ்கெட்ச் மிஸ் ஆகிறது. தீனாவுக்கு கத்தி குத்து விழுகிறது. அவரை காப்பாற்றுவதற்காக பத்திரமாக அழைத்து வந்து ஓர் இடத்தில் பாதுகாத்து வைத்தியம் செய்கிறார். அனீஸ் மாசிலாமணி.

இந்த சமயத்தில் தான் அனீஸ் மாசிலாமணி இந்த சம்பவங்களில் ஈடுபடுவதற்கு காரணம் அவரது தம்பியின் மரணம் தான் என தெரிய வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அனீஸ் மாசிலாமணிக்கு எதிராக கேபிஒய் தீனாவே திரும்புகிறார். அப்படி இந்த இருவரின் வாழ்க்கையில் என்ன சம்பவம் நடந்தது ? ஒன்றாக இருக்கும் இவர்கள் இருவரையும் இப்படி எதிராக திரும்ப வைத்தது எது ? இதில் யார் உயிர் பிழைத்தார்கள் என்பது மீதிக்கதை.

புதியவர் என்றாலும் கூட மணி என்கிற அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனீஸ் மாசிலாமணி வெகு யதார்த்தமாக, ஒரு ரவுடியிச கேங்கிலேயே கொஞ்சம் பக்குவப்பட்ட அமைதியான ஒரு ரவுடியாக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். சண்டை காட்சிகள் ஆகட்டும், தம்பி உள்ளிட்ட மற்றவர்களுக்கு பக்குவம் சொல்லி அறிவுரை கூறுவதாகட்டும் அவரது கதாபாத்திரம் ரொம்பவே மெச்சூடாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவரை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

வாயை திறந்தாலே கலகலவென காமெடி பட்டாசாக வெடித்து தள்ளும் கேபிஒய் தீனாவா இது என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குள் தன்னை புகுத்திக் கொண்டு ஒரு துளி கூட காமெடி வெளிப்படாமல் அந்த சீரியஸான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். இவரது பிளாஷ்பேக் யாரும் எதிர்பாராதது. தீனாவை இப்படியும் பயன்படுத்தலாம் என இந்த கதாபாத்திரம் காட்டி இருக்கிறது.

தாதா கதாபாத்திரத்தில் மைம் கோபி என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒன்று. அவருக்கென அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை போன்றது தான். வழக்கம் போல அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் மைம் கோபி.

அதேபோல ஸ்கெட்ச் ராம்ஸ் என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் ஆட்களை தூக்க ஸ்கெட்ச் போடும் நபராக நடித்துள்ள ராம் என்கிற ராமச்சந்திரன் துரைராஜ் இந்த படத்திலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார். பெண் காவல் அதிகாரியாக நடித்துள்ளவரின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.

மற்றும் நட்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன் என பலரும் இந்த படத்திற்கு தாங்கள் பொருத்தமான தேர்வு தான் என நிரூபித்திருக்கிறார்கள்.

படம் முழுக்கவே இரவில் நடக்கும் கதை என்பதால் தனது வித்தியாசமான கேமரா கோணங்களால் யார் இந்த மனிதர் என வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தின் இரவு நேர அழகை தனது கேமராவால் அள்ளி வந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்த படத்திற்கு வெறும் பின்னணி இசை மட்டுமே மிக சரியாக இருக்கும் என முடிவு செய்த இயக்குனருக்கும் இசையமைப்பாளர் டுமேவுக்கும் மிகப்பெரிய பாராட்டுகளை சொல்லியாக வேண்டும்.

இரு தரப்புக்கும் உள்ள முன்பகை, மோதல், யார் பெரியவர் என்கிற ஈகோ இவைதான் ரவுடிகள் மற்றும் கூலி படையினர் உருவாக காரணம் என்பதை இதில் வேறொரு பின்னணி காரணம் கொண்டு சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி வெங்கடேசன், வழக்கமான ரவுடியிச கதை தானே என்று நினைத்து படம் பார்க்க அமர்ந்தாலும் வித்தியாசமான பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை என ஓரளவு நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட முயற்சி செய்திருக்கிறார்.. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

நேரம் கிடைத்தால் நிச்சயமாக ஃப்ரைடே படத்திற்கு டிக்கெட் போட்டு விடுங்கள்

 

ஃப்ரைடே ; குட் டே 

 

ரேட்டிங் ; 3 / 5

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading