ஒண்டிமுனியும்  நல்லபாடனும் ; விமர்சனம்

 

சிறுவயதில் கிணற்றில் தவறி விழுந்த தனது மகன் உயிர் பிழைத்தால், ஒண்டிமுனிக்கு தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை பலி கொடுப்பதாக நேர்ந்து விடுகிறார் அவரது தந்தையான பரோட்டா முருகேசன். மகனும் பிழைத்துக் கொள்கிறார்.. ஆனால் அந்த கோவில் தர்மகர்த்தாக்களான பங்காளிகள் இருவரும் தங்களது சொந்த பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் பல வருடங்களாக கோவில் திறக்கப்படாமல் இருக்கிறது.

தனது நேர்த்திக்கடன் செலுத்த நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது என்பதால் இவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து எப்படியாவது கோவிலை திறக்க ஏற்பாடு செய்யுங்கள் என கேட்கிறார் பரோட்டா முருகேசன்.

அதை சாக்காக வைத்து பரோட்டா முருகேசன் உள்ளிட்ட அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமான நிலத்தை அபகரிப்பதற்காக அவர்களிடம் கையெழுத்து பெறுவதற்காக கோவிலை திறக்கிறோம் என பங்காளிகள் இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அவரது மகள் வரதட்சணை பிரச்சனை காரணமாக தந்தை வீட்டிற்கு வந்து விடுகிறார். வளர்ந்து நிற்கும் அந்த ஆட்டு கிடாயை கொடுங்கள் நான் விற்று வரதட்சணையை எடுத்துக் கொள்கிறேன் என்கிறார் மருமகன். எந்த மகனின் உயிரை காப்பாற்ற அந்த ஆட்டுக்கிடாயை நேர்ந்து விட்டாரோ அந்த மகனே பைக் வாங்குவதற்காக கறிக்கடையில் அந்த கிடாயை விற்கும் அளவிற்கு செல்கிறார்.

உண்மையிலேயே அந்த ஒண்டிமுனி கோயிலை அவர்கள் திறந்தார்களா ? தனது குடும்பத்தினரிடமிருந்து அந்த ஆட்டுக்கிடாயை புரோட்டா முருகேசன் காப்பாற்றினாரா ? தனது நேர்த்திக்கடனை பரோட்டா முருகேசன் செலுத்தினாரா என்பது மீதிக்கதை.

வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் காமெடியில் அவருக்கு பரோட்டா சப்ளை செய்பவராக நடித்திருந்தவர் பரோட்டா முருகேசன். இந்த படத்தில் முழு நீள கதையின் நாயகனாக மொத்த படத்தையும் தாங்கி பிடித்து நிறுத்தி இருக்கிறார். ஆனால் தான் ஏற்றுக் கொண்ட அந்த கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக படு எதார்த்தமாக நடித்து ஒட்டுமொத்த பாராட்டையும் பெறுகிறார் பரோட்டா முருகேசன்.

எவ்வளவு வறுமையில் இருந்தாலும் கூட மகளின் நிலை கண்டு வருந்துவதும் மகனின் தாந்தோன்றித்தனமான செயலைக் கண்டு வெதும்புவதும் எப்படியாவது ஆட்டுக்கிடாயை சாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தி விட வேண்டும் என பதைபதைப்பதும் என காட்சிக்கு காட்சி ஒரு அடிமட்ட விவசாய தொழிலாளியை கண் முன் நிறுத்துகிறார்.

இவரைத் தாண்டி படம் முழுவதும் கவனம் பெறுபவர்கள் என்றால் பெரிய பண்ணையாராக நடித்திருக்கின்ற கார்த்திகேசன் தனது முரட்டுத்தனமாக தோற்றத்தாலும் நரித் தந்திரமான செயல்களாலும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை இருக்கிறார். அதே சமயம் அவரை போல ரொம்பவே தந்திரமாக யோசிக்காவிட்டாலும் கொஞ்சம் காமெடி கலந்த இன்னொரு கதாபாத்திரத்தில் சிறிய பண்ணையாராக நடித்திருக்கும் முருகன் தன் பங்கிற்கு ஸ்கோர் செய்கிறார்.

முருகனின் மனைவியாக வருபவரின் எதார்த்தமான கொங்கு பாஷை வசனங்கள் தியேட்டரில் கைதட்டலை அள்ளுகின்றன. பரோட்டா முருகேசன் மகனாக நடித்திருக்கும் விஜயன் குடும்பப் பொறுப்பை உணராமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி தண்ணீர் அடிப்பது, காதலிக்காக சுயநலமாக செயல்படுவது என தனது பொறுப்பற்ற தன்மையை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தந்தையின் கஷ்டம் உணர்ந்து மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல விஜய் சேனாதிபதி பேரனாக நடித்திருக்கும் சிறுவன் உள்ளிட்ட பலரும் மிகப் பொருத்தமான தேர்வு தான்.

இந்த படத்திற்கு பாடல்கள் அமைத்து வேகத்தை தடை செய்யாமல் பின்னணி இசை மூலமாக மட்டுமே மென்சோகத்தோடு இந்த படத்தை நடத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன். ஒரு கிராமத்திற்குள்ளேயே 2 மணி நேரம் நாமும் வாழ்ந்த அந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விமல்.

இதை சாதாரண படம் என்று ஒதுக்கி விடாமல் நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு அருமையான வாழ்வியல் பாடத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகவனம். கிட்டத்தட்ட விருதுக்கு அனுப்பப்படும் வகையிலான படம் என்றாலும் கூட, அதை ஒரு நேர்த்தியாக வெகுஜன ரசிகர்கள் கூட ரசிக்கக் கூடிய வகையில் அடுத்து என்ன நடக்கும் என்கிற பதைப்பை நமக்கு ஏற்படுத்தும் விதமாகவே காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்,

ஒருவேளை இந்த படத்திற்கு போய் வரலாம் என்று நினைத்து உள்ளே நுழையும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்த படம் நல்ல திருப்தியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading