சென்னையில் ட்ராவல்ஸ் கம்பெனியில் கார் ஓட்டுநராக பணி புரியும் கிஷோர், அங்கே அவமானப்படுத்தப்பட மனைவியின் நகைகளை வைத்து புது கார் வாங்கி முதலாளி ஆகிறார். உணவு டெலிவரி செய்யும் டிடிஎஃப் வாசனுடன் அவரது தங்கை காதல் வயப்படுகிறார். ஒருநாள் எதிர்பாராமல் சாலையில் பைக்கில் வந்த டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்த கிஷோரை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு செல்கிறார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கும் கிஷோர் 3 மாதங்களாக வண்டி ஓட்ட முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட தான் ஏற்கனவே பணியாற்றிய ட்ராவல்ஸ் நிறுவனத்தில் தனது காரை வாடகைக்கு விடுகிறார்.
இடையில் தன்னை திட்டிய டிடிஎப் வாசனை தங்கை காதலிப்பது அறிந்து அதிர்ச்சியாகிறார். இந்த நிலையில் அவர் கார் மதுரையில் லாக்கப் மரணம் செய்த இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டு பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை பார்க்கிறார். மறுநாள் விசாரணைக்கு மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் கிஷோர். அவரை வழியிலேயே போட்டுத் தள்ள எதிர் தரப்பு கும்பல் முயற்சி செய்கிறது. அங்கே வரும் டிடிஎஃப் வாசன் கிஷோரை காப்பாற்றி கமிஷனர் அலுவலகம் அழைத்து செல்கிறார். அவர் மீது தவறு இல்லை என நேர்மையான போலீஸ் அதிகாரி வத்திக்குச்சி திலீபன் அவரை போக சொல்கிறார்.
ஆனால் அரசியல் பின்புலம் காரணமாக திடீரென புதிய போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஹரீஷ் பெராடி கிஷோரை அரெஸ்ட் செய்து கஸ்டடியில் வைத்து குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து துன்புறுத்துகிறார். இதன் பின்னணியில் முதல்வரான ஆடுகளம் கிஷோரே இருப்பதால், கிஷோர் இந்த பொய் வழக்கில் இருந்து தப்பினாரா ? டிடிஎஃப் வாசன் கிஷோரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளித்ததா என்பது மீதிக்கதை.
நடுத்தர வர்க்கத்து பாசமான குடும்ப தலைவனாக, டாக்ஸி ஓட்டுனராக கிஷோர் வழக்கம் போல இயல்புமீறாத நடிப்பை வழங்கியுள்ளார், காலில் அடிபட்டு அவர் படம் முழுவதும் நடக்கும் காட்சிகளில் நிஜமாகவே அடிபட்டவரின் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். போலீசில் சிக்கிக்கொண்டு அவர் அடி வாங்கும் காட்சிகளை பார்க்கும்போது, இன்னொரு விசாரணை ஞாபகத்திற்கு வருகிறது.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் டிடிஎப் வாசன் நடிப்பில் மீட்டருக்கு மேல் போகாமல் கதைக்கு ஏற்ப ஒரு தகுதியான கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொண்டுள்ளார். ஓவர் பில்டப் எதுவும் இல்லாமல், காதல் பின்னர் காதலியின் அண்ணனை காப்பாற்ற நடக்கும் சட்ட போராட்டம் என கதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதால் நம்முடன் இருக்கும் ஒரு பழகிய நபர் போல அவரை பார்க்க முடிகிறது. அவர் பைக் ரேசர் என்பதால் படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு பைக் ரேஸ் சண்டைக் காட்சியையும் இணைத்துள்ளார்கள். அது படத்தின் ஹைலைட்டான ஒன்று.
கிஷோரின் மனைவியாக அபிராமி.. கணவனின் நிலை கண்டு அவரை முன்னேற்ற துடிக்கும் பெண்ணாக, அதன்பிறகு அவர் போலீசில் சித்திரவதைக்கு ஆளாகிறார் என்று தெரிந்து கதறும்போதும் வீட்டிலேயே போலீஸ் டார்ச்சரை குடும்பத்துடன் அனுபவிக்கும் போதும் அந்த குடும்பத்திலேயே நாமும் சிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளாக ஹரிஷ் பெராடி, ஜான் விஜய் போன்றவர்கள் இவர்களை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வை தங்களது அழகான நடிப்பால் ஏற்படுத்தி விடுகிறார்கள். வத்திக்குச்சி திலீபன் கொஞ்ச நேரமே வந்தாலும் பாசிட்டிவான நடிப்பால் கவனம் இருக்கிறார். குடும்பத்திற்கு ஆதரவாக வரும் சிங்கம்புலியும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. அதனாலோ என்னவோ கடந்த கால ஆட்சியின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கி இருக்கிறார். படம் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தினாலும் கிளைமாக்ஸில் கோர்ட்டில் இந்த வழக்கில் ஏற்படும் திருப்பம் சினிமாத்தனமானது என்றாலும் கூட எதிர்பாராதது.
மதுரையில் நடைபெற்ற குற்றச் சம்பவத்திற்கு சென்னையில் இருக்கும் டிரைவரை பலியாக்க எதற்கு முயற்சித்தார்கள் ? அதற்கு காரணம் ரொம்ப வீக்காக இருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
ஐபிஎல் ; இன்னொரு விசாரணை









Leave a Reply