ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதற்காக ஏமாறுகிறார்கள் என்று ஒருவன் ஏமாற்றிக் கொண்டே இருந்தால் ? அதைத்தான் சொல்கிறது இந்த நிர்வாகம் பொறுப்பல்ல படம்..
நாயகன் கார்த்தீஸ்வரன் தம்முடன் சில நண்பர்கள் வட்டாரத்தை சேர்த்துக்கொண்டு சதுரங்க வேட்டை பாணியில் மக்களிடம் ஆசையை தூண்டி அதிக வட்டி தருவதாக சொல்லி பைனான்ஸில் பணம் போட சொல்வது, குறைந்த விலையில் செல்போன் தருவதாக சொல்வது என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்கிறார். ஆனால் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படி ஒரு முறை அவர் காதல் வயப்படும்போது அவர் காதலியிடமும் தனது கைவரிசையை காட்டுகிறார். ஏமாந்த காதலி, தனது தோழியான போலீஸ் அதிகாரி ஸ்ரீநிதியிடம் இதுபற்றி கூறி அவனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார். ஸ்ரீநிதியால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா ? இத்தனை கோடிகளை அடித்த கார்த்தீஸ்வரன் எதற்காக இந்த மோசடி வேலையில் ஈடுபடுகிறார் ? அவரது பின்னணி என்ன என்பது மீதிக்கதை.
கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்பில் மோசடி மன்னன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கார்த்தீஸ்வரன். இவரே இயக்குனர் என்பதால் தனது கதாபாத்திரத்தை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செதுக்கி இருக்கிறார். இவரது பார்வையில் ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுவது தவறு இல்லை என்பது போல அந்த கதாபாத்திரமாக விளக்கம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் ,கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களின் பேராசை அதை தூண்டுகிறது அதைத்தான் தனது கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் கார்த்தீஸ்வரன்.
கதாநாயகி என்றால் மிடுக்கும் கம்பீரமுமாக கொஞ்சம் அழகும் சேர்த்து படம் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீநிதி ரொம்பவே கவருகிறார். இவர் கார்த்தீஸ்வரன் மீதான விசாரணையை ஆரம்பித்த பிறகு, படம் சூடு பிடிப்பது என்னவோ உண்மை. ஆனால் கடைசியில் இவருக்கும் கார்த்தீஸ்வரனுக்குமான ட்விஸ்ட் எதிர்பாராதது.
கார்த்தீஸ்வரனின் கூட்டாளிகளாக ஆதவன் உள்ளிட்டோர் தங்களது பங்குக்கு ஏதோ காமெடி பண்ண முயற்சித்து இருக்கிறார்கள். கார்த்தீஸ்வரனின் மோசடியில் பேராசைப்பட்டு ஏமாந்து அழுது புலம்பும் லிவிங்ஸ்டனின் கதாபாத்திரம், ஒரு சராசரி பேராசை கொண்ட மனிதனின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அங்கங்கே ரிலாக்ஸ் கொடுத்தாலும் பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சல் அதிகம். இயக்குனர் கார்த்திஸ்வரன் சதுரங்க வேட்டை பாணியில் இந்த படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்/ படம் துவங்கி பல நிமிடங்கள் வரை கொஞ்சம் சாதாரணமாக நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு துவங்கி, கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்புடன் கொண்டு சென்று இருக்கிறார். இந்த படத்தை பார்த்து ஒரு பத்து பேராவது திருந்தினால் இந்த படத்திற்கும் இயக்குனர் கார்த்தீஸ்வரனுக்கும் வெற்றிதான்.









Leave a Reply