மதுரையில் ஷேர் ஆட்டோ டிரைவராக இருக்கும் யுவன் கிருஷ்ணா காளி என்கிற ஆட்டுக்கிடாயை வளர்க்கிறார். அதேபோல பிரபல தொழிலதிபராக இருக்கும் ரிதன் கிருஷ்ணா தவறாது கிடா சண்டையில் கலந்து கொண்டு அதற்கான மெடலை தொடர்ந்து தன்னிடம் தக்கவைத்து வருபவர். அப்படி ஒரு போட்டியின் போது யுவன் கிருஷ்ணாவின் ஆட்டுக்கிடாயிடம் மோதும் போது தோல்வியை தழுவுகிறார்.
அதிலிருந்து இருவருக்குமான பகை அதிகரிக்கிறது. அடுத்தடுத்து கிடா சண்டை நடக்கிறது. இதற்குள் நடக்கும் விரோதம், துரோகம், உள்ளடி வேலைகள் ஆகியவற்றை தொடர்ந்து கடைசியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
மலையாள இயக்குனர் என்றாலும் ஒரு தமிழ் இயக்குனரை போல அழகாக இந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகபல். மதுரை மண்ணின் அந்த உக்கிரம் படம் முழுக்க தெரிகிறது.
நாயகன் யுவன் கிருஷ்ணா அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கோபம், ஆக்ரோஷம் எல்லாம் கலந்தவராக இருக்கிறார். ஆனால் ஒரு சாயலில் இவரை பார்க்கும்போது நடிகர் ரமணா போல் இருப்பது ஒரு பக்கம் மைனஸ் ஆக தெரிகிறது.
அதேபோல வில்லனாக நடிகர் ரிதன் கிருஷ்ணா போட்டியில் வெற்றி தனக்கு தான் என்கிற, தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கின்ற ஈகோ பிடித்த ஒரு மனிதனை படம் முழுவதும் கண் முன் நிறுத்துகிறார். சில இடங்களில் இவரது வில்லத்தனம் மிரட்டுகிறது.
நடிகர் மதுசூதன் ராவ்.. வழக்கமாக வில்லன் கதாபாத்திரங்களில் இவரை பார்த்து வந்தோம். இந்த படத்தில் ஒரு பாசிட்டிவான கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்துள்ளார். நாயகனின் நண்பர்களாக வரும் மைக் செட் சித்தன், கேபிஒய் யோகி ஆகியோரும் பொருத்தமான தேர்வு என நிரூபிக்கிறார்கள்.
நாயகியாக அம்மு அபிராமி சில காட்சிகளில் வந்தாலும் கூட ஒரு வழக்கமான காதல் கதாநாயகியாக கடந்து செல்கிறார். இவர்களை தாண்டி படத்தில் இடம்பெறும் காளி என்கிற கிடாயும் அதனுடன் மோதுகின்ற இரண்டு கிடாய்களும் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
உண்மையிலேயே கிடாய் சண்டையை அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் எம்.எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவும் இயல்பாக நடக்கும் ஒரு கிடா சண்டையில் ஒரு பார்வையாளராக நாமும் கலந்து கொண்டது போன்ற உணர்வு உருவாக காரணம் என்றால் அது மிகையல்ல.
சமீப காலமாக கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் வருவது அதிலும் நேர்த்தியான படைப்புகளாக வருவது குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படத்தைத் தொடர்ந்து இந்த ஜாக்கி திரைப்படமும் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நல்ல படமாக வெளியாகி உள்ளது
மீண்டும் ஒரு மலையாள இயக்குனர் தமிழில் அதுவும் மதுரை மண்ணை மையமாகக் கொண்டு இயக்கி உள்ள படம் தான் ஜாக்கி. இதுநாள் வரை சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு ஆகியவற்றை மையப்படுத்தி வந்த படங்களை பார்த்து இருக்கிறோம். இந்த படம் கிடா சண்டை, அதனால் ஏற்படும் பகை ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.









Leave a Reply