தூத்துக்குடி பின்னணியில் நடக்கும் கதை. ஊரில் செல்வாக்கு மிக்க, ஹெலிகாப்டரில் பறந்து செல்லக்கூடிய சக்தி வாய்ந்த செல்வந்தராக இருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார். ஆனால் அவரை விரும்பி திருமணம் செய்து கொள்ளும் அவரது நண்பனின் மகள், அவரை நான்கு வருடங்களாக நெருங்க விடாமல் பாராமுகம் காட்டுகிறார்/ இதனால் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது/ இதற்கிடையே இது தொடர்பாக ஏற்படும் கொலை அவரை சிக்கலில் மாட்டி விடுகிறது.
அதன்பிறகு அரசியலில் பயணிக்க விரும்பி அதற்காக காலடி எடுத்து வைக்கிறார். ஆனால் அதற்கு முன்னர் அவர் செய்த சில விஷயங்கள் அவருக்கு பின்னால் தற்போது துரோகங்களாக வந்து நிற்கின்றன. அவற்றை குகன் சக்கரவர்த்தியார் சமாளித்தாரா ? இல்லையா என்பது மீதி கதை.
யாருப்பா இந்த நடிகர் என கேட்க வைக்கும் விதமாக பார்க்கும்போதே, ஒரு பக்கம் பாசிட்டிவான எண்ணத்தையும் இன்னொரு பக்கம் நெகட்டிவான எண்ணத்தையும் தோற்றுவிக்கும் விதமாக ஆஜானுபாகுவான உருவத்தில் நம்மை மிரட்டுகிறார் படத்தின் நாயகன் குகன் சக்கரவர்த்தியார். இவர் ஹீரோ மட்டுமல்ல.. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட 21 துறைகளையும் தன் கையில் எடுத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார்.
அதனால் சில இடங்களில் படத்தில் தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அதே சமயம் இடைவேளைக்கு பின்பு கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் குகன் சக்கரவர்த்தியாரின் செயற்கையான நடிப்பு அதை பொறுமையாக பார்க்க விடாமல் தடுக்கிறது நடிப்பு பயிற்சி எடுத்திருந்தாலோ அல்லது இன்னொரு இயக்குனரை வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தாலோ இந்த படம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்.
எதிர்பாராமல் அப்துல் கலாமின் மரணத்தை இந்த படத்திற்கு கொண்டு வந்தது புத்திசாலித்தனமான முயற்சி. அதேபோல படத்தில் பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் என பலரும் தங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகனின் மனைவியாக வருபவரும் அதன் பிறகு அவரது முன்னாள் காதலியாக வருபவரும் நடிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கதையின் திருப்புமுனைக்கு படத்தின் ஒரு நாயகி காரணமாக அமைவது எதிர்பாராதது.
ஆக்சன் காட்சிகளை மிகத் திறம்பட கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார். குறிப்பாக கிளைமாக்ஸ் நெருங்குவதற்கு முன்பான காட்சிகள் உண்மையிலேயே சிறப்பானவை. படத்தின் ஆரம்பத்திலிருந்து இதுபோல கவனித்து இருந்தால் வங்காள விரிகுடா இன்னும் கவனம் ஈர்த்திருக்கும்.









Leave a Reply