சென்னையில் தண்ணீர் சுத்தம் செய்யும் வாட்டர் பியூரிபையர் கருவியை விற்கும் நபர் அட்டகத்தி தினேஷ். அவரால் தண்ணீர் கேன் பிசினஸ் செய்யும் மன்சூர் அலிகானுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மதுரையில் இருக்கும் பைனான்சியர் அர்ஜயிடம் கடன் வாங்க செல்கிறார் மன்சூர் அலிகான். அப்போது ஒரு சிக்கல் காரணமாக, தன்னிடம் உள்ள கருப்பு கலர் பல்சர் வண்டியை எப்படியாவது இங்கிருந்து கொண்டு செல்லுங்கள் என மன்சூர் அலிகான் இடம் கொடுத்து அனுப்பி விடுகிறார்.
அது வந்த பிறகு மன்சூர் அலிகான் மகனுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் தனது காதலியின் விருப்பத்திற்காக கருப்பு கலர் பல்சர் வாங்க நினைக்கும் அட்டகத்தி தினேஷ் மன்சூர் அலிகான் இடம் கருப்பு பல்சர் இருப்பதை கேள்விப்பட்டு அதை வாங்க வருகிறார். இதுதான் சமயம் என தினேஷ் தலையில் அதை கட்டி விடுகிறார் மன்சூர் அலிகான்.
ஆனால் அந்த வண்டியை வாங்கி முதல் நாள் காதலியுடன் செல்லும்போது விபத்தில் சிக்குகிறார் தினேஷ். அதன் பிறகு தினேஷின் நண்பனும் அவர் மனைவியும், இன்னொரு முறை தினேஷின் சகோதரி மற்றும் அவரது கணவரும் அதேபோல கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த பல்சரின் மர்ம பின்னணி குறித்து ஆராயும்போது தினேஷுக்கு மதுரையில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் குறித்தும் அதன் பின்னணியில் பைனான்சியர் அர்ஜய் இருப்பதும் தெரிய வருகிறது. அப்படி அந்த பல்சருக்கு பின்னணியில் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது. அதை கண்டுபிடித்த அட்டகத்தி தினேஷ் அதை சரி செய்து அந்த பிரச்சனையிலிருந்து மீண்டாரா என்பது மீதி கதை..
அட்டகத்தி தினேஷ் எதார்த்தமாக நடிக்கிறார் என்றாலும் அவரை பயன்படுத்தும் இயக்குனர் கையில் தான் அவரை பட்டை தீட்டும் பொறுப்பு இருக்கிறது என்பது இந்தப் படத்தில் நன்றாகவே தெரிகிறது. அதிலும் இரண்டு வேடங்களில் தனித்துவம் காட்டி நடித்துள்ளார் தினேஷ். காளையை அடக்கும் காட்சிகளிலும் தான் கெத்து தினேஷ் என நிரூபிக்கிறார்.
அவரது காதலியாக ரேஷ்மா வெங்கடேஷ்.. காதலிக்கு என்ன வேலையோ அதை மட்டும் செய்து விட்டுப் போகிறார்/ மன்சூர் அலிகானுக்கு நகைச்சுவை கலந்த வேடம். ஆனால் பார்க்கும் நேரமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது நமக்கே சாப்பிட வேண்டும் என ஆவலை தூண்டி விடுகிறார். வில்லனாக அர்ஜய், போலீஸ் அதிகாரியாக சரவண சுப்பையா இருவரும் சரியான தேர்வு. தினேஷின் நண்பனாக வரும் பிராங்க்ஸ்டர் ராகுல் காமெடி என்கிற பெயரில் கடுப்பேத்தவே செய்கிறார். அது மட்டும் தான் கொஞ்சம் மைனஸ் பாயிண்ட்.
மற்றபடி ஒரு ஜாலியான, அதே சமயம் திரில், சஸ்பென்ஸ் கலந்த படமாக இதை கொடுத்திருக்கிறார் இயக்குனர் முரளி கிரிஷ். குறிப்பாக ஒரு காளை மாட்டிற்கும் பல்சருக்குமான தொடர்பை அவர் இந்த படத்தில் காட்டிய விதம் தமிழ் சினிமாவில் புதுசு.
படம் பார்க்க வரும் ரசிகர்களை கருப்பு பல்சர் நிச்சயம் ஏமாற்றாது.









Leave a Reply