நாயகன் த்ரிகுண் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கும் மாணவி ஸ்ரீ ஜித்தா கோஷுக்கும் காதல் ஏற்படுகிறது.. ஒருமுறை டேட்டிங் போகும்போது இருவருக்கும் இடையே மேற்படி விஷயம் நடக்கிறது. ஆனால் நாயகன் ஏதோ தான் பெரிய உண்மை விளம்பி என்பது போல தனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் இப்படி உறவு ஏற்பட்டுள்ளது என வெளிப்படையாக சொல்கிறார். இதனால் காதலை கோபத்தில் பிரேக் அப் செய்துவிட்டு சென்றாலும் மீண்டும் நாயகனின் தவறை மன்னித்து சில காலம் கழித்து மீண்டும் டேட்டிங் செல்கிறார்கள். மீண்டும் ஒரு தவறு.
அப்போது நாயகன் இன்னொரு ஆண்ட்டியுடன் தான் உறவு கொண்ட விஷயத்தை வெளிப்படையாக சொல்கிறார். இதையும் மீறி இருவரும் ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டு நாயகியின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கே நாயகனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் ஏற்கனவே உறவு கொண்ட அந்த இரண்டு பெண்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் யார், அங்கே ஏன் அவர்கள் இருக்கிறார்கள், அதன் பிறகு நாயகன் நாயகி வாழ்க்கை திசை மாறியதா என்பது மீதிக்கதை.
நாயகன் த்ரிகுண் கரும்பு தின்ன கூலியா என்பது போல ஒன்றுக்கு மூன்று பெண்களுடன் ஜல்சா பண்ணி ஜமாய்க்கிறார். அந்த அப்பாவித்’தனமான அதே சமயம் அடப்பாவி என்று சொல்ல வைக்கிற கதாபாத்திரத்திற்கு வெகுவாக பொருந்தி இருக்கிறார்.
கதாநாயகி ஸ்ரீஜித்தா கோஷ் இவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறியேமா என்று சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
டியூசன் டீச்சர் ஆக இனியா வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு ரசகுல்லா சாப்பிட்ட அனுபவம் தான். அது மட்டுமா நீண்ட நாளைக்கு பிறகு சுந்தரா ட்ராவல்ஸ் ராதா, அவரும் தன் பங்கிற்கு கவர்ச்சியில் ரசிகர்களுக்கு ஜாங்கிரி ஊட்டுகிறார். இவர்களுடன் நாயகன் அடிக்கும் லூட்டி இளசுகளை நெளிய வைத்துக்கொண்டே ரசிக்க வைக்கும். ஆனால் என்ன குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க முடியாது.
தம்பி ராமையா மற்றும் அவரது மருமகனாக சத்யன் இருவரும் தத்தம் தங்களது மனைவியரை நாயகனிடமிருந்து காப்பாற்ற நடத்தும் போராட்டங்கள் பல நேரம் அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் சில நேரம் சிரிக்கவும் வைக்கிறது.
நாயகனின் ஃப்ளாஷ்பேக் கதையை கேட்கும் கல்லூரி ஹாஸ்டல் டீமாக ரவிமரியா, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்கள் கூட்டணி காமெடியும் கலகலப்புக்கு ஓகே சொல்கின்றன. ஜோதிடராக கொஞ்ச நேரமே வந்தாலும் சாம்ஸ் தன்னுடைய பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.
விஜயஸ்ரீயின் ஒளிப்பதிவும் அருணகிரியின் இசையும் காட்சிக்கு காட்சி கிளுகிளுப்பு ஏற்றுகின்றன. ரெண்டு மணி நேரம் பார்த்து ரசித்து விட்டு போகலாம் என்று வரும் இளசுளுக்கு இந்த படம் நல்ல விருந்துதான்.









Leave a Reply