போர்த் ஃப்ளோர் ; விமர்சனம்

பெங்களூரில் வசிக்கும் ஆரி தனது முன்னாள் காதலி பவித்ராவின் கோரிக்கையை ஏற்று அவரை காப்பாற்ற சென்னை வருகிறார். அவரது கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் தங்குகிறார். ஆனால் தனது காதலியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம் அவர் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட்டில் உள்ள சில வீடுகளில் இருப்பவர்கள் அமானுஷ்யமாக உயிரோடு இருப்பது போல அவர் முன்பு தோன்றுகிறார்கள். அவர்கள் மூலமாக சில தடையங்கள் ஆரிக்கு கிடைக்கின்றன.

அதே சமயம் அவர் காதலி மர்மமாக காணாமல் போனதன் பின்னணியில் சென்னையில் உள்ள மிகப்பெரிய வில்லனான சுப்பிரமணிய சிவா இருப்பது தெரிய வருகிறது. அவரால் ஆரிகு ஆபத்தும் தேடி வருகிறது. இதற்கிடையே காதலிக்கும் தனக்கும் பிறந்த குழந்தை ஆரியிடம் வந்து சேருகிறது. இது எப்படி நடந்தது ? அம்மா எங்கே ? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மீதி படம் விடை சொல்கிறது.

நடிகர் ஆரி அர்ஜுனன் தீரன் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தனது முதிர்ச்சியான மற்றும் கட்டுப்பாடான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். பயம், குழப்பம் மற்றும் உணர்ச்சிகரமான வலியை அவர் வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. அவரது திரை இருப்பு படத்தின் மர்மக் காட்சிகளுக்கு வலிமை சேர்த்து, ரசிகர்களைக் கதையோடு ஒன்றச் செய்கிறது.

பவித்ரா மற்றும் தீப்ஷிகா என இரண்டு நாயகிகளும் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் அளவாக பயணப்பட்டு தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முக பாவனைகளால் மிரட்டினாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் நடிப்பின் மூலமாக மிரட்டவும் செய்கிறார்.

ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை எவ்வாறு திடீரெனப் பேரழிவாக மாறுகிறது என்பதையும், அதன் விளைவாக ஏற்படும் எதிர்பாராத மரணங்கள் மற்றும் விடை தெரியாத கேள்விகளையும் இந்தப் படம் ஆராய்கிறது. படத்தின் பெயருக்கேற்ப, ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் நடக்கும் மர்மமான நிகழ்வுகள் தான் கதையின் மையப்புள்ளியாக அமைகிறது.

திகில், கிரைம் திரில்லர், சமூக பிரச்சனை என பல அம்சங்கள் நிறைந்த திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், விறுவிறுப்பான திரைக்கதையும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுமாக படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்..

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading