கார்மேனி செல்வம் ; விமர்சனம்

தொழிலதிபரான கௌதம் மேனனிடம் கார் டிரைவராக வேலை பார்ப்பவர் சமுத்திரக்கனி. மனைவி லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் பள்ளி செல்லும் மகன் என அளவான குடும்பம். ஆனாலும் இன்னும் கொஞ்சம் வசதியான வாழ்க்கை வாழ்ந்தால் சொந்த பந்தங்கள் மத்தியில் கௌரவமாக இருக்குமே என நினைக்கிறார் லட்சுமி பிரியா.

இந்த நிலையில் கௌதம் மேனன் தனது மனைவி அபிநயா மற்றும் மகளை அழைத்துக் கொண்டு ஒரு மாதம் வெளியூர் பயணம் செல்கிறார். அந்த சமயத்தில் திடீரென மகனுக்கு ஏற்பட்ட விபத்து செலவுக்காக கடன் வாங்கிய தொகையை திருப்பி அடைக்கும் எண்ணத்தில் கௌதம் மேனனின் காரை கால் டாக்ஸியில் ஒப்பந்தம் செய்து ஓட்டத் துவங்குகிறார் சமுத்திரக்கனி.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் எதிர்ப்படும் எதிர்பாராத நிகழ்வுகள் அவரை எப்படி புரட்டிப் போடுகின்றன, என்ன விதமான முடிவு எடுக்க தூண்டுகின்றன, அவர் இப்படி கால் டாக்ஸியில் தனது காரை ஓட்டும் விபரம் கௌதம் மேனனுக்கு தெரிய வந்ததா என்பதற்கு மிக பரபரப்பாக விடை சொல்கிறது மீதி கதை.
ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக இருப்பதை வைத்துக் கொண்டு பகட்டு வாழ்க்கை தேவையில்லை என வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஏகப்பொருத்தம். அதே சமயம் ஒரு கட்டத்தில் மனைவியின் அழுத்தம், உறவினர்கள் மத்தியில் தங்களைப் பற்றிய பார்வை என எல்லாம் சேர்ந்து அவரையும் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு சம்பாதிக்க தூண்டுவதையும் அதற்காக மேலும் மேலும் கடன் வாங்கி அவதிப்படுவதையும் ஒரு சராசரி மனிதனாக வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயமாக இந்த படம் பார்ப்பவர்களுக்கு சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் ஒரு நல்ல பாடத்தை சொல்லும்.

நடுத்தர, இல்லையில்லை.. அடித்தட்டு குடும்பத்தரசிகளின் இயல்பான இயக்கத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமௌலி. அவரது எதிர்பார்ப்பில் எந்த தவறும் சொல்ல முடியாவிட்டாலும் அவரது செயல்கள் கொடுக்கும் அழுத்தம் அந்த குடும்பத்தின் போக்கையே திசை திருப்பி விடுவது பல பெண்களுக்கு நிச்சயம் ஒரு பாடத்தை கற்றுத் தரும்.

அவர்களின் மகனாக நடித்திருக்கும் கரண் சக்கரவர்த்தியும் துருதுறுப்பாக நடித்திருக்கிறார். பண்பட்ட மனிதராக கௌதம் மேனன்.. அவரது காரை சமுத்திரக்கனி அவருக்கு தெரியாமலேயே கால் டாக்ஸியில் இணைத்து ஓட்ட துவங்குவதில் இருந்து சமுத்திரக்கனி பயப்படுகிறாரோ இல்லையோ நாம் பயப்பட துவங்கி விடுகிறோம். இறுதியில் அந்த உண்மை கௌதம் மேனனுக்கு தெரிய வரும்போது அவர் என்ன செய்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவரது மனைவியாக அபிநயா.. கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த புன்னகை முகம், அவருக்கு ஏற்படும் முடிவு என நம்மை ஒரு பக்கம் சந்தோஷப்படுத்தி இன்னொரு பக்கம் துக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது.

சமுத்திரக்கனியின் அந்த கால் டாக்சி பயணத்தில் எதிர்படும் மனிதர்களாக படவா கோபி, கார்த்திக் குமார் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு சமுத்திரக்கனியை அனுப்பி வைக்கும் நபர் என பல கதாபாத்திரங்களும் கதையை நகர்த்த தேவையான பொருத்தமான கதாபாத்திரங்கள். மிகச் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பகுதி ஏதோ கால் டாக்ஸி பயணத்தை மேற்கொள்வது போலவே இருப்பது ஒரு பலவீனம். தேடி வரும் உதவியை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு பின்னர் தேவையில்லாமல் கடனில் சிக்கிக் கொள்ளும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை பார்க்கும்போது சில நேரங்களில் எரிச்சல் ஏற்படவே செய்கிறது. அதே சமயம் அதுவே அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி.

ஒரு குடும்பத்திற்கு எது தேவை, எது அவசியம், எது முக்கியம் என்பதை இந்த கார்மேனி செல்வம் படத்தை பார்த்து விட்டு வெளியே செல்பவர்கள் பலபேர் உணர்ந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்..

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading