இயக்குநர் சேரன் – நடிகை அதுல்யா ரவி கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் ‘நீர் மோர் பந்தல்’ திறப்பு விழா

 

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ்நாடு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு இயக்குநரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர். இந்நிகழ்வில் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடாங்கி ஆபிரகாம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் சேரன் பேசுகையில், ” வெயில் நூறு டிகிரிக்கு மேல் அடித்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. அனைவருக்கும் தாகம் எடுக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதிருக்கிறது. அந்த அளவிற்கு நீரை அருந்தினால் தான் இந்த உடலால் வெப்பத்தை தாங்க முடிகிறது. இது போன்ற தருணத்தில் நம்முடைய தமிழ்நாடு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் வடபழனி சாலிகிராமம் பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே தாகத்தால் தவிக்கின்ற மக்களுக்கு தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 500 பேருக்கு நீர் மோரை வழங்க உள்ளனர். இன்று முதல் பத்து நாள் வரை இந்த சேவை தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்களுடைய நலன் கருதி அவர்களுடைய தாகத்தை .தணிப்பதற்காக இந்த சங்கம் எடுத்திருக்கும் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இந்தப் பக்கமாக சாலையில் செல்பவர்கள் இந்த மோரை சாப்பிடலாம் நல்ல தரமாகவும் ,மணமாகவும் இருக்கிறது. இதில் கருவேப்பிலை- பச்சை மிளகாய்- எலுமிச்சம் பழம்- இஞ்சி- கொத்தமல்லி -என ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நீர் மோரை தயாரித்து வழங்குகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அந்தப் பக்கம் செல்லும்போது ஒரு கோப்பை நீர் மோரை அருந்தி பயனடையுங்கள் ” என்றார்.

நடிகை அதுல்யா ரவி பேசுகையில், ” அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ்நாடு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இன்று ஒரு நல்ல நாள். இந்த நல்ல நாளன்று நல்ல விசயத்தை தொடங்கி இருக்கிறார்கள். நல்ல எண்ணங்களுடன் தொடங்கப்பட்டிருப்பதால் பலருக்கும் பயன்படும். குறிப்பாக கோடை காலத்தில் தாகத்துடன் நடந்து செல்பவர்களுக்கு இவர்கள் வழங்கும் நீர்மோர் தாகத்தை தணிக்கும். இது பொது மக்களில் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் விசயங்களில் என்னையும் கலந்து கொள்ள வைத்ததற்காக பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகையாளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களை போல் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள். அந்த அன்பிற்கு நன்றி. இவர்கள் இன்னும் நல்ல விசயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வழங்கப்பட்ட நீர் மோரை நானும் அருந்தினேன். இயல்பாகவே கோடை காலத்தில் நான் வீட்டில் தினமும் மோர் அருந்துவேன். வீட்டில் தயாரிப்பது போல் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. குறிப்பாக மோரில் கருவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி மிளகாய் என அனைத்தையும் கலந்திருந்தார்கள். தயிரும் நன்றாக இருந்தது. இதனால் இதனை அருந்தும் பொது மக்களின் ஆசியும் இவர்களுக்கு கிடைக்கும்” என்றார்.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading