29 ; விமர்சனம்

29 வயது என்பது ஒரு ஆணின் வாழ்வில் நிலைத்தன்மையை எதிர்பார்க்கும் முக்கியமான காலகட்டம். அந்த வயதில் தனக்கென்று எந்தவொரு சமூக அடையாளமும் இல்லாமல் தவிக்கும் விதுவுக்கு, பிரீத்தி அஸ்ரானியின் காதல் ஒரு அழகான போதையாகக் கிடைக்கிறது. ஒரு பெண்ணின் காதலன் என்பது மட்டுமே தன் வாழ்வின் ஆகச்சிறந்த அடையாளம் என்று விது முடங்கிப் போகும் போதுதான், படம் ஒரு முதிர்ச்சியான தளத்திற்கு நகர்கிறது.

காதல் என்பது ஒருவருக்கு சிறகுகளாக இருந்து உயரப் பறக்க வைக்க வேண்டுமே தவிர, அதுவே ஒருவரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற விஜியின் (பிரீத்தி அஸ்ரானி) முடிவு, திரைக்கதையில் மிக முக்கியமான ஒரு பாடத்தைப் புகட்டுகிறது.

தன் காதலனின் எதிர்கால நலனுக்காகத் தன் காதலையே துறக்கத் துணியும் நாயகியின் கதாபாத்திரம், இன்றைய கால இளைய தலைமுறைக்குத் தேவையான ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையாகும்.

இயக்குநர் ரத்னகுமாரின் படைப்பில் உருவாகியுள்ள ‘29’ திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்பட்ட “காதலே கதி” என்ற பிம்பத்தை மிக நேர்த்தியாக உடைத்தெறிந்து, வாழ்வியலின் எதார்த்தத்தைப் பேசுகிறது

ரெட்ரோ படத்தில் வில்லனாக மிரட்டிய விது, இதில் எதார்த்தமான பக்கத்து வீட்டுப் பையனாக மாறி, காதல் தோல்வியின் வலியைத் தன் கண்கள் மூலமாகவே கடத்தி முத்திரை பதிக்கிறார். அதேபோல் பிரீத்தி அஸ்ரானி ஒரு அந்நிய மாநிலத்தவராகத் தெரிந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஒரு அசல் தமிழ் பெண்ணாகவே மாறி ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

நாயகனின் நண்பராக வரும் அவினாஸ், வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் சுருங்கிவிடாமல், காதலின் வலியைத் தன் புலம்பல்கள் வழியாகவும், அதே சமயம் வாழ்வின் இறுக்கமான தருணங்களை எதார்த்தமான கிண்டல்கள் மூலமாகவும் கடத்திச் செல்லும் ஒரு ‘ரிலீஃப்’ காரணியாகச் செயல்படுகிறார். நாயகனின் அம்மாவாக ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, ஒரு சராசரி தாயின் கவலையையும் பாசத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம், தன் மகளின் உணர்வுகளையும் குடும்பச் சூழலையும் பிரதிபலிக்கும் விதத்தில் கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளார். இவர்களோடு மாஸ்டர் மகேந்திரன் வந்தேன் போனேன் என்று வந்து போகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கடற்கரை மற்றும் பேருந்து பயணங்களின் வழியே நம் பழைய காதல் நினைவுகளை மீட்டெடுக்கிறது. ஷான் ரோல்டனின் இசை காதலின் கொண்டாட்டத்தையும், அதன் வலியையும் பார்வையாளர்களின் இதயத்திற்குள் மிக மென்மையாகக் கடத்துகிறது. ஆர்.எஸ்.சதீஷ் குமாரின் தொகுப்பு மெதுவான திரைக்கதையிலும் ஒருவித லயத்தைக் கூட்டி ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிக முக்கியமான பலமே இயக்குநர் ரத்னகுமாரின் சமரசமற்ற திரைமொழிதான். காலம் காலமாகப் பெண்ணை நிலவாகவும், ஆணை சிங்கமாகவும் வர்ணிக்கும் கற்பனை உலகில் இருந்து விலகி, அவர்கள் இருவரும் சாதாரண மனிதர்கள்தான் என்பதையும், அவர்களுக்கு இடையிலான ஈர்ப்பு என்பது ஒரு கட்டத்தில் காமத்தில் முடிவதுதான் இயற்கை என்பதையும் எந்தவித ஆபாசமுமின்றி மிக நாகரீகமாகவும் கவித்துவமாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில், இப்படம் காதலை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக மட்டும் காட்டாமல், வாழ்க்கையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்கிறது. காதலைத் தாண்டிச் சாதிக்க வேண்டிய உலகமும், தேட வேண்டிய சுய அடையாளமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதைச் சொன்ன விதத்தில், ‘29’ திரைப்படம் காதலர்களை மட்டும் அல்லாது, வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வைக்கும் ஒரு படைப்பாக மிளிர்கிறது.

 

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading