கருப்பு ; விமர்சனம்

 

மகளின் சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து வருகிறார் இந்திரன்ஸ். கூடவே கொண்டுவரும் நகையை சென்னையில் விற்று பணமாக்கலாம் என்கிற நிலையில் சென்னை வந்து இறங்கியதுமே நகை களவு போகிறது. பின்னர் போலீஸில் அளிக்கும் புகார் மூலமாக சில பவுன்கள் குறைந்த நிலையில் நகைகள் மீட்கப்படுகின்றன. ஆனால் அதை நீதிமன்றத்தின் மூலம் தான் வாங்க வேண்டும் என்பதற்காக வக்கீல் பேபி கண்ணன் என்கிற ஆர் ஜே பாலாஜியிடம் செல்கின்றனர். அவர் நீதிபதி நட்டியை தனது கைக்குள் வைத்துக்கொண்டு இந்த வழக்கை இழுத்தடித்து இந்திரன்ஸிடமிருந்து வழக்கு செலவிற்காக அடிக்கடி பணம் பெறுகிறார்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன இந்திரன்ஸ் அங்கே இருக்கும் கருப்பு சாமியிடம் மிளகாய் அரைத்து முறையிட கருப்பு சாமி வக்கீல் சூர்யாவாக இந்திரன்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வந்து ஆஜராகிறார். ஆரம்பத்தில் தனது பவரை காட்டினாலும் வந்திருப்பது கடவுள் என்பதை புரிந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி உங்களுடைய பவரை காட்டாமல் இந்த நீதிமன்ற நடைமுறைகளை முடிந்தால் திருத்துங்கள் என்று சவால் விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் மீதிப்படம்.

படத்தின் கதாநாயகன் சூர்யா என்றாலும் மலையாள பட பாணியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் என்ட்ரி கொடுக்கிறார் ஆனாலும் மாஸான என்ட்ரி. படத்தின் கதை ஓட்டத்தில் அவருக்கு கொஞ்சம் குறைவான நேரமே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு குறை என்றாலும் வருகிற நேரத்தில் எல்லாம் அதிரடி காட்டி அதிர வைக்கிறார் சூர்யா. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு அவருக்கு ஒரு வெற்றிப் படம் இது.

பேபி கண்ணன் என்கிற வக்கீலாக நீதிமன்றத்தையே தன் கைக்குள் வைத்து ஆட்டி வைக்கும் அந்த காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் செய்யும் காரியங்கள் அவர் மீது கோபத்தை வரவழைப்பது அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி.

சிடுசிடு நீதிபதியாக நடிகர் நட்டி. எப்படி வழக்கறிஞர்களின் கைப்பாவையாக ஒரு நீதிபதி இருக்க முடியும் என்பதற்கு சரியான உதாரணமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலையாள குணச்சித்திர நடிகர் இந்திரன்ஸ்.. படத்தின் முதல் பாதியில் இவர் ஏற்படுத்தும் தாக்கம் தான் படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது. அந்த அளவுக்கு இவரது நடிப்பும் இவரது மகளாக நடித்திருக்கும் அனகாவின் நடிப்பும் ரொம்பவே எதார்த்தம்.

ஒரு கமர்சியல் படத்திற்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவிற்கு கதாநாயகியாக த்ரிஷா நடித்துக் கொடுத்திருக்கிறார். லப்பர் பந்து சுவாசிகா வில்லன் பக்கம் சேர்ந்து கொண்டு வில்லத்தனம் காட்டியிருக்கிறார். நம் நாட்டில் நீதிமன்றங்களில் ஏன் வழக்குகள் தேங்கி இருக்கின்றன, சட்டத்தை பல வழக்கறிஞர்கள் எப்படி தவறாக பயன்படுத்தி அப்பாவிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்துகின்றனர் என்பதை இதற்கு முன்பு எந்த படமும் இப்படி தெளிவாக சொன்னது இல்லை என்கிற விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி.

அவருக்கே உண்டான நக்கலும் நையாண்டியும் இதிலும் இருக்கிறது. கூடவே பாட்ஷா ரஜினி, லியோ விஜய், சிங்கம் சூர்யா என பல படங்களின் ரெஃபரன்ஸ்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் செய்திருக்கிறார்.

சாய் அபயங்கர் இசையில் கருப்பு பாடல் சாமியாட்டம் போட வைக்கிறது நிச்சயம் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது ஒரு புது ட்ரீட்டாக இருக்கும். என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் காத்திருந்த சூர்யாவிற்கு தேடி வந்த வெற்றி இந்த கருப்பு என்று சொல்லலாம்.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading