தமிழ்நாடு – கேரளா பார்டரில் உள்ள தேனி மலைப் பகுதியில் 90களில் நடக்கும் கதையாக துவங்குகிறது.
மாரி அண்ணா என்கிற பெயரில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிக்குள் முகாமிட்டு, அவர்களை பயன்படுத்தி யானைத் தந்தங்களை வெட்டி வெளிநாட்டுக்கு கடத்தி பணம் சம்பாதிக்கிறார் சுனில். அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி பலமுறை அவரை சிக்கலில் மாட்டி வைக்கிறார் எதிர்த்தரப்பை சேர்ந்த கபீர் துவான் சிங்.
அவரிடம் பறிகொடுத்த தனது யானைத் தந்தங்களை மீட்பதற்காக குஜராத்தில் இருந்து ஆண்டனி என்பவரின் உதவியை நாடுகிறார் சுனில். ஆண்டனியின் உதவியுடன் மீண்டும் வெற்றிகரமாக தந்தம் கடத்தலில் ஈடுபடுகிறார்.
அதே சமயம் அந்த மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக ஆண்டனி இருக்கும் நிலையில், பலர் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகின்றனர். ஆனால் ஆண்டனியால் பணம் சம்பாதித்த சுனில், அவருக்கு பணம் கொடுத்து உதவ மறுப்பதுடன், அவரை கொல்வதற்கு ஆட்களை ஏவுகிறார்.
அவரிடம் இருந்து தப்பிக்கும் ஆண்டனி, அதன் பிறகு என்ன நடவடிக்கையில் இறங்குகிறார்? சுனில் மட்டுமல்ல, அவரது எதிர்த்தரப்பான கபீர் துவான் சிங்கும் தன்னை வேட்டையாடத் துடிக்கும் நிலையில், அவர்கள் இருவரையும் இவரால் சமாளிக்க முடிந்ததா? பழங்குடி இன மக்களுக்கு விடுதலை பெற்றுத் தர முடிந்ததா? என்பது மீதிக்கதை.
அங்கமாலி டைரீஸ் படம் மூலம் பிரபலமான ஆண்டனி வர்கீஸ், இந்த படத்தில் முழுக்க மாஸ் ஹீரோ அவதாரத்தில் வருகிறார். நீண்ட தாடி, கோபமான பார்வை, மெதுவான நடை, ஸ்லோ மோஷன் என படம் முழுவதும் அவரை ஒரு புராண நாயகன் போல காட்ட முயற்சிக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உணர்ச்சி சார்ந்த காட்சிகளில் கதாபாத்திரம் ஆழமாக எழுதப்படாததால் அவரது நடிப்பு முழுமையாக வேலை செய்யவில்லை.
இந்த படத்தில் காதல் இல்லை என்பதால் கதாநாயகி துசாரா விஜயனுக்கும் பெரிய வேலையில்லை. கிளைமாக்ஸ்க்கு சற்று முன்னதாக வரும் அவர் ஆக்சன் அவதாரம் எடுத்து மிரட்ட முயற்சித்து இருக்கிறார் வழக்கம் போல நடிகர் சுனில் மிரட்டல். அவரது இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் திரந்தசு ஆரம்பக் காட்சிகளிலேயே தம் கவனத்தை ஈர்த்து யார் இவர் என கவனிக்க வைக்கிறார்
சுனிலின் எதிர்முகம் எதிரியாக நடித்துள்ள கபீர் துகான் சிங் வழக்கம் போல பாலிவுட் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பஹத் பாசிலின் தம்பியோ என்று நினைக்க வைக்கும் விதமாக போலீஸ் எஸ்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிசங்கர் நாராயணன் இத்தனை நட்சத்திரக் கூட்டத்திலும் தனது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்
கதையின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பழங்குடி இன மக்களின் பிரதிநிதியாக நடித்திருக்கும் ஜெகதீஷ் பக்குவப்பட்ட பண்பட்ட நடிப்பை வழக்கம் போல வெளிப்படுத்தி இருக்கிறார்
கேஜிஎப், சலார் பாணியில் இடிமுழக்கம் போல ஒலிக்கும் பின்னணி இசை, சாதாரண காட்சிகளையும் பெரிய தருணங்களாக உணர வைக்கிறது.
காட்டு லொகேஷன்கள், சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பு குறிப்பாக இரவு நேர காட்டு காட்சிகள், தீ வெளிச்சத்தில் நடக்கும் மோதல்கள், யானைகளை மையமாக வைத்த காட்சிகள் ஒளிப்பதிவாளர் ரணதீவின் கைவண்ணத்தில் திரையில் அழகாக தெரிகின்றன.
படம் இரண்டு மணி நேரம் ஓடினாலும், அதில் பெரும்பாலான நேரம் சண்டை, கொலை, துரத்தல், மாஸ் ஷாட்கள், ஸ்லோ மோஷன் ஆகியவற்றிலேயே செலவாகிறது. கதை முன்னேறுவதற்குப் பதிலாக, ஹீரோ எவ்வளவு பெரியவன் என்பதை மீண்டும் மீண்டும் காட்ட முயற்சிப்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயின்ட்.
யானைத் தந்த கடத்தல், பழங்குடி மக்களின் துயரம், காட்டு மாஃபியா போன்ற வலுவான கருக்கள் இருந்தாலும் வலுவான திரைக்கதை, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரங்கள், புதுமையான கதை சொல்லல் ஆகியவற்றை எதிர்பார்த்தால் காட்டாளன் முழுமையான திருப்தியை தராமல் போகலாம்.









Leave a Reply