“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” ; பிரபாஸ்

“பாகுபலி: தி பிகினிங்”  திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது.

Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி ‘பாகுபலி’ எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடித்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், உலகின் பல பகுதிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்தார்.

“இத்தாலியில் கூட மக்கள் என்னை பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு நான் அறப்பணிக்காகச் சென்றபோதும், அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’ படத்தை எவ்வளவு விரும்புகிறோம் என்று கூறினார்கள். ‘பாகுபலி’க்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது,” என்று பிரபாஸ் தெரிவித்தார்.

மேலும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“நார்வேயில் ஒருவர் ராஜமௌலி சாரிடம் வந்து, ‘நீங்கள் ஒரு இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள்தான் பாகுபலி படத்தின் இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். ‘பாகுபலி’ உலகின் எத்தனை இடங்களை சென்றடைந்திருந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயாஜாலம்.”

இந்த திரைப்படம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையே எவ்வாறு மாற்றிவிட்டது என்பதையும் பிரபாஸ் பகிர்ந்தார்.

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்போது நான் ராஜமௌலி சாருக்கு போன் செய்து, ‘என்னை இந்த ஜென்மத்தில் சுதந்திரமாக பயணம் செய்ய விட மாட்டீர்களா? எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை வேண்டாமா?’ என்று நகைச்சுவையாகக் கேட்பேன். முன்பெல்லாம் ஓய்வாக இருக்க மும்பை அல்லது டெல்லி செல்வோம். இப்போது அது கூட முடியவில்லை. உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.” என்கிறார்.

பத்து ஆண்டுகள் கடந்தும், பாகுபலியின் மரபும் தாக்கமும் இன்னும் ஈடு இணையற்றதாகவே திகழ்கிறது. இந்திய சினிமாவின் மைல்கல்லாக நிலைத்து நிற்கும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய தூதுவராக பிரபாஸ் தொடர்ந்து இருந்து வருகிறார். பான்-இந்தியா சினிமாவின் முகமாகவும், உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராகவும் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் வலுவடைந்துள்ளது.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading