அமரம் ; விமர்சனம்.

 

போக்குவரத்து வசதியே இல்லாத மலை கிராமத்தை சேர்ந்த ராஜன், தேஜஸ்வர், ஜார்ஜ் ஆகியோர் தங்களது ஊர் தலைவனான சாய் தீனா சொல்வதைக் கேட்டு நகரத்திற்கு சென்று அவ்வப்போது கொலைகளை செய்துவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக வெவ்வேறு நபர்கள் கோர்ட்டில் சரண்டர் ஆகின்றனர். அப்படி ஒரு முறை எழுத்தாளர் சுரேஷ் மேனனை கொல்வதை அவரது மகள் ஐரா அகர்வால் பார்த்துவிடுகிறார். தனது தந்தையின் நண்பரும் எம்எல்ஏவுமான நாகிநீடுவிடம், தன் தந்தையைக் கொன்றவனை நானே பழிவாங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதை அவர் அலட்சியப்படுத்துகிறார்.

இதனால் அவரது மகனை துணைக்கு சேர்த்துக்கொண்டு தானே களத்தில் இறங்க, பதறிப்போன நாகிநீடு தானே முன்வந்து நாயகன் ராஜன் தேஜஸ்வரை காட்டிக்கொடுக்கிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது, அது என்ன ? முதலில் ஏன் நாகிநீடு தயங்கினார் ? ஆக்ரோசத்துடன் இருக்கும் ஐரா அகர்வால், ராஜன், தேஜஸ்வரைக் கொல்ல முடிந்ததா ? அதைத்தாண்டி என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த ‘அருகன்’ கதாபாத்திரத்தில் நாயகன் ராஜன், தேஜஸ்வர் கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். படம் முழுவதும் தாடியுடன் ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டது போல தோற்றம் காட்டினாலும், ஆக்ஷன் காட்சிகளில் ஏதோ 10 படம் நடித்தவரைப் போன்று பிரமிக்க வைக்கிறார்.

சினேகா, விஜயசாந்தி இருவரையும் மிக்ஸ் செய்தால் கிடைக்கும் ஒரு அழகிய தோற்றத்தில் நாயகி ஹைரா அகர்வால் படம் முழுவதும் நம்மை வசீகரிக்கிறார். ஆரம்பத்திலேயே அவரது தந்தையின் கொலை காட்சியுடன் தான் நமக்கு அறிமுகமாவதால், படம் முழுவதும் சோகமும் சீரியஸுமாகத்தான் காணப்படுகிறார். ஆனாலும் அதிலும் நடிப்பைக் கொட்டி நம்மை வசீகரப்படுத்துகிறார்.

சாய் தீனா வழக்கம் போல கெத்தான வில்லன். நல்லவரா, கெட்டவரா என்று நம்மைக் யோசிக்க வைத்து, கடைசியில் ஒரிஜினல் முகம் காட்டுகிறார். எம்எல்ஏவாக வரும் நாகிநீடு வழக்கம் போல அரசியல் வில்லத்தனம். இடையில் திடீரென வரும் ஹரீஷ் பெராடி கதாபாத்திரம் எதற்காக வந்து போகிறது என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. என்றாலும், அவரது வேலையை அவர் சரியாக செய்திருக்கிறார். மொசாட் கதாபாத்திரத்தில் மரியான் ஜார்ஜ் அளந்து நடித்துள்ளார்.

பரத்குமார் ஒளிப்பதிவில் அந்த பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு கண்களில் ஒத்திக்கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் திரு அருள் கிருஷ்ணா. படத்தின் மேக்கிங்கில் நிஜமாகவே மிரட்டியிருக்கிறார். புதுமுகங்கள் என்பதால் ரசிகர்களுக்கு இந்தப் படம் எந்த அளவிற்குச் சென்றடையும் எனத் தெரியவில்லை. அதேசமயம் தியேட்டருக்கு வந்தால் ரசிகர்களை ஏமாற்றாத ஒரு அனுபவத்தை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

 

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading