ஆண்பாவம் பொல்லாதது ; விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரியோ ராஜ், தனது பெற்றோர் பார்க்கும் மாளவிகா மனோஜை திருமணம் செய்து கொள்கிறார். கட்டுப்பாடான குடும்பத்தில் இருந்தாலும் மாடர்ன் எண்ணங்களுடன் வலம் வரும் மாளவிகாவுக்கும் ரியோவுக்கும் ஒரு வருட திருமண வாழ்க்கைக்குள்ளாகவே நிறைய கருத்து வேறுபாடு பிரச்சனைகள் வருகின்றன. இதனை தொடர்ந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார் மாளவிகா.

இதற்காக ரியோ ராஜ் வழக்கறிஞர் ஆர்ஜே விக்னேஷை சென்று சந்திக்க, எதிர் தரப்பில் மாளவிகாவின் வழக்கறிஞராக ஆஜராபவர் ஆர்ஜே விக்னேஷிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி ஷீலா தான் என்பது தெரிகிறது.

இதன்பிறகு இந்த வழக்கு சூடு பிடிக்கிறது. இவர்களுக்கு விவாகரத்து கிடைத்ததா ? ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இருவரும் இந்த வழக்கின் மூலம் என்ன புரிந்து கொண்டார்கள் என்பது மீதிக்கதை.
மனைவியுடன் சண்டை போடும் காட்சிகளில் நகைச்சுவையும் நெருக்கடியும் கலந்த அப்பாவி கணவன் பாத்திரத்தில் ரியோ ராஜ் மிகவும் இயல்பாக நடித்துள்ளார்.. இன்னொரு பக்கம் மனைவிக்காக உருகுவது, ஈகோ யுத்தத்தில் வெடிப்பது, விவாகரத்துக்கு சம்மதிப்பது என்று இன்னொரு முகமும் காட்டுகிறார்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், வழக்கமான நகைச்சுவையோடு செண்டிமெண்டாக நடித்து கலங்கடிக்கவும் செய்திருக்கிறார். பெண்ணுரிமை பேசும் வழக்கறிஞராக பளிச்சென நடித்துள்ளார் ஷீலா. லப்பர் பந்து புகழ் ஜென்சன் திவாகரின் காமெடி படத்தை கலகலப்பாக நகர்த்த உதவுகிறது. .

சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பட்ஜெட்டுக்குத் தக்கவாறு ஒலிக்கிறது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு வெளிச்சத்தை கொடுத்துள்ளது.

2கே கிட்ஸ் தலைமுறைகளிடையே நடக்கும் ஈகோ சண்டையை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார்கள். நிகழ்கால ஜோடிகளிடையே நடக்கும் காதல் சண்டையானது எதுவரை செல்கிறது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். பல பெண்கள், திருமணத்திற்குப் பிறகு கணவர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு சோசியல் மீடியாவில் தங்களை தொலைப்பதையும் அது அவர்களது வாழ்க்கைக்கு எப்படி உலை வைக்கிறது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்…

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading