கல்லூரியில் படிக்கும் பூர்ணிமா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அப்போதே ஒருவரை காதலித்து மிகப்பெரிய இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து கோச்சிங் பெற்று உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்பது அவர்கள் இருவரின் கனவாக இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக பூர்ணிமாவின் தந்தை டெல்லி கணேஷ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட, தனது லட்சியத்தை உதறிவிட்டு குடும்பத்தை கவனிக்க வேலைக்கு செல்கிறார் பூர்ணிமா.
ஆனால் காதலனோ தனது லட்சியம் தான் பெரிது என்று காதலியை உதறிவிட்டு படிக்க செல்கிறார். அவருக்கு வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணமும் ஆகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பூர்ணிமா, தான் பிறந்து வளர்ந்த மார்த்தாண்டம் பகுதியில் தனது சிறுவயது நண்பர்களை பார்ப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் கிளம்பி செல்கிறார்.
அப்படி கேரளா சென்று அங்கிருக்கும் தனது தோழியை சந்திக்கும் அவர் இன்னும் சில இடங்களுக்கு செல்ல விரும்புகிறார். அவரது தோழி மூலமாக போகும் வழியில் தங்கும் இடம், பைக் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கிறது. அப்படி வழியில் அறிமுகமாகிறார் நாயகன் வைபவ். அவரும் இதேபோல பைக்கில் சுற்றுப்பயணம் வந்தவர் தான். அவருக்கும் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. இப்படி இருவரின் பயணத்தில் ஏற்படும் சுவாரசியங்கள், சங்கடங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக மீதி கதை நகர்கிறது. இறுதியில் இவர்களது நட்பு என்னவாக ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.
சின்னத்திரை பிரபலமாக இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் பூர்ணிமா ரவி கதையை முழுதாக உள்வாங்கி எல்லாக் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்.
பூர்ணிமாவின் திடீர் தோழனாக வழித்துணையாக பயணித்திருக்கும் வைபவ் முருகேசன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக தன்னை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
பூர்ணிமாவின் கேரளத் தோழி நமிதா கிருஷ்ணமூர்த்தியின் தோற்றமும், நடிப்பும் ரொம்பவே செயற்கைத்தனம் கலந்த அலட்டல் ரகம்., டெல்லி கணேஷ், பிரபு சாலமன், லீலா சாம்சன் உள்பட அனைவருமே கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்..
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை இயற்கை பயணத்திற்கு கூடுதல் இதம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். கேரளா, கோவா என காட்சிகள் பயணிக்கும் ஒவ்வொரு லொகேஷனையும் அந்தந்த களத்திற்கே நம்மையும் அழைத்துச்சென்று கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பெண் தனது பழைய நினைவுகளை தேடி கண்டு பிடித்துச் செல்லும் சாலை பயணத்தை கூடுமானவரை பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஃபீல் குட் படமாக சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ஹரி மகாதேவன். வாழ்வு என்பது தேங்கி நிற்பதல்ல.. கடந்து செல்வது. நாமும் நின்றுவிடக்கூடாது. எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும் என்கிற கருத்தை அழகாக சொல்லி இருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
.









Leave a Reply