ராஜா சாப் ; விமர்சனம்

 

கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் வளரும் பிரபாஸ் ஒரு காலத்தில் தங்களது பூர்வீக நகை காணாமல் போக அதை தேடிச் சென்ற தாத்தா சஞ்சய் தத்தை பாட்டியின் வேண்டுகோளுக்காக கண்டுபிடிக்க கிளம்புகிறார். நகரத்தில் அவர் இருப்பதாக தெரியவர, அங்கே செல்லும் பிரபாஸுக்கு ஒரு பக்கம் கன்னியாஸ்திரி ஆக மாறப்போகும் நிதி அகர்வால், இன்னொரு பக்கம் பிரபாஸின் தாத்தாவிற்கு சேர வேண்டிய பல லட்சம் தொகையை கொடுப்பதற்காக பிரபாஸை தேடி வரும் மாளவிகா மோகன் இருவரும் நட்பாகிறார்கள்.

தாத்தாவை தேடும் பணியில் மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவிற்கு செல்லும்போது பிரபாஸ் மற்றும் கதாநாயகிகள் நண்பர்கள் குழு அங்கே மாட்டிக் கொள்கிறார்கள். அங்கே எதிர்பாராத விதமாக தாத்தா சஞ்சய் தத்தின் தரிசனம் கிடைக்கிறது. ஆனால் வேறு ஒரு விதமாக.. அது என்ன ? தாத்தா எதற்காக இவ்வளவு நாள் காணாமல் போயிருந்தார் ? பிரபாஸ் அவரை கண்டுபிடித்து இடம் ஒப்படைத்தாரா என்பது மீதி கதை.

அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து வந்த பிரபாஸை நீண்ட நாளைக்கு பிறகு கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. காதலிகளிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவதும் பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல் திணறுவது என ரஜினி ஸ்டைலில் காமெடி பண்ணினாலும் இன்னொரு பக்கம் வேலைக்கு முன் எதிரிகளுடன் அதிரடியாக மோதுவது இடைவேளைக்கு பின் பேய்களுடன் மோதுவது என ஆக்சனுக்கும் குறை வைக்காமல் விருந்தளித்து இருக்கிறார் பிரபாஸ்.

கதாநாயகிகளாக ஒன்றல்ல, இரண்டல்ல.. மூன்று பேர்.. கிராமத்து சொந்தக்கார பெண்ணாக ரித்தி குமார், கன்னியாஸ்திரி ஆக மாற விரும்பி பிரபாஸை பார்த்ததும் மனம் மாறும் நித்தி அகர்வால், சமுத்திரக்கனியின் பேத்தியாக வரும் மாளவிகா மோகனன் மூவருமே கிடைக்கும் இடங்களில் எல்லாம் பிரபாஸ் மீதான தங்களது அன்பையும் காதலையும் வெளிப்படுத்த போட்டி முயற்சிக்கிறார்கள். படத்தில் கிளுகிளுப்பான பகுதிக்கு இவர்கள் துணையாக நிற்கிறார்கள்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இவர் வில்லனா என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசிவரை வெவ்வேறு வித காலகட்டத்தில் வெவ்வேறு தோற்றங்களில் நம்மிடம் தோன்றுகிறார். அதில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அதுவும் குறிப்பாக மாந்திரீக காட்சிகள் நம்மை மிரட்டுகிறார். சஞ்சய் தத்திற்கு அவருடைய இத்தனை வருட திரையுலக பயணத்தில் இந்த கதாபாத்திரம் புது அனுபவமாக இருக்கும்.

அதே போல சஞ்சய் தத்துக்கு ஜோடியாக நடிகை அம்மு அபிராமி (ஆச்சரியப்படாதீர்கள்.. உண்மை தான்) கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் கெத்து காட்டி நடித்து இருக்கிறார். பின்னாடி அவர் பாட்டியாக வாரும்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜரினா வஹாப் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பேரன் மீதான பாசம், தாத்தா மீது ஏக்கம் என தொடர்ந்து சென்டிமென்ட் ஏரியாவில் குறை வைக்காமல் பார்த்துக் கொள்கிறார்.

சமுத்திரக்கனி கொஞ்ச காட்சிகளே வந்து எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார். பிரபாஸ் உடன் கூடவே நகைச்சுவைக்காக சில நட்பு பட்டாளங்கள்.. அவர்களில் முக்கியமாக விடிவி கணேஷ் முக்கியத்துவம் பெரும் விதமாக நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி படத்தின் பிரம்மாண்டத்திற்கு காட்சிக்கு காட்சி உத்தரவாதம் தருகிறார் என்றால், பாடல் காட்சிகள் ஆகட்டும் இல்லை பிரமாண்டமான பேய் பங்களா ஆகட்டும் ஆர்ட் டைரக்டர் ராஜீவனும் தானும் சளைத்தவர் இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார்.

இந்த காட்சிகளை நகைச்சுவை கலந்த திரில்லிங் உடன் கடத்துவதற்கு தமனின் பின்னணி இசை உறுதுணையாக நிற்கிறது. பாடல்கள் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தது போல உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பிரபாஸை வைத்து இப்படி ஒரு ஃபேண்டஸி காமெடி ஹாரர் படத்தை எடுக்கலாம் என யோசித்த இயக்குனர் மாருதி அதை எங்கு சுற்றி எப்படி கொண்டு வந்து முடிப்பது என்று கொஞ்சம் தடுமாறி இருப்பது படத்தின் நீளத்திலிருந்து தெரிகிறது. படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளை கொஞ்சம் சுருக்கி நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். மற்றபடி பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சங்கராந்தி விருந்து தான்.

 

ரேட்டிங் ; 3.5/5

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading