பராசக்தி ; விமர்சனம்

 

1965க்கும் மேல் தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எந்த அளவுக்கு தீவிரமடைந்தது, தமிழர்கள் எந்த அளவுக்கு தங்கள் உயிரைக் கொடுத்து போராடினார்கள் என்பதை கண் முன்னே நிறுத்தும் படமாக உருவாகி இருக்கிறது பராசக்தி.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து புறநானூற்று படை என்கிற மாணவர் படையை உருவாக்கி பகிரங்கமாக எதிர்க்கிறார் சிவகார்த்திகேயன். அப்படி ஒரு முறை எதிர்ப்பை காட்ட ரயிலை கொளுத்தும் போது அதில் எதிர்பாராத விதமாக அவரது நண்பன் ஒருவர் பலியாகிறார். இதனால் போராட்டத்தை கைவிட்டு அறவழிக்குத் திரும்பும் சிவகார்த்திகேயன் படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் இறப்பால் கிடைக்கும் ரயில் என்ஜின் டிரைவர் வேலைக்கு செல்கிறார்.

அதேசமயம் அந்த ரயில் எரிப்பு போராட்டத்தில் உருவம் யார் என தெரியாத நிலையில் சிவகார்த்திகேயனுடன் மோதும் டெல்லி போலீஸ் அதிகாரி ரவி மோகன் அவரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டுகிறார். சில வருடம் கழித்து அதே போல மாணவர் போராட்டம் நடக்க அதன் பின்னணியில் இதே போன்று ஒரு நபர் இருக்கிறார் என்று ரவி மோகன் மோப்பம் பிடிக்கிறார். ஆனால் அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவது சிவகார்த்திகேயனின் தம்பியான அதர்வா. வன்முறை போராட்டம் வேண்டாம் அறவழியில் போராடுங்கள் என சிவகார்த்திகேயன் அறிவுரை சொன்னாலும் அதர்வா உள்ளிட்ட நண்பர்கள் கேட்பதாக இல்லை.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு டிடிஆர் வேலை கிடைப்பதற்காக ஹிந்தி கற்க வேண்டும் என சூழல் ஏற்படுகிறது. ஓரளவு ஹிந்தி கற்றுக் கொண்டு நேர்முகத் தேர்வுக்காக செல்கிறார். ஆனால் அங்கே அவர் வேலைக்கு தகுதி இல்லை என ஹிந்தியை காரணம் காட்டி ஒதுக்கப்படுகிறார். இதனால் வெகுண்டு எழும் சிவகார்த்திகேயன் தம்பியுடன் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் களத்தில் குதிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.

போராட்ட குணம் கொண்ட மாணவர் தலைவனாக, நண்பனின் மரணத்தால் பக்குவப்பட்ட ஒரு குடும்ப தலைவனாக, பின்னர் இந்தி தன்னை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வாதாரத்தையே எப்படி பாதிக்கப் போகிறது என்பதை உணர்ந்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு இயக்க தலைவனாக என வெவ்வேறு பரிணாமங்களில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி ஒரு வரலாற்று கதை சொல்லும்போது அதில் காதல் காட்சிகள் கொஞ்சம் மைனஸ் என்பதை மறுக்க முடியாது. இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிக்கும் போராட்டத்தில் சிவகார்த்திகேயனின் பங்கு அதிகம். குறிப்பாக கிளைமாக்ஸ் ட்ரெயின் சண்டை காட்சி படு உக்கிரம்.

வில்லனாக ஆனால் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் ரவி மோகன்.. தமிழன் என்றாலும் கூட ஒரு ஆங்கிலப் பெண்ணுக்கும் தமிழனுக்கும் பிறந்ததால் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படும் குணாதிசயம் கொண்ட ஜெயம் ரவி. தமிழர்களின் மீதான வெறுப்பையும் அவர்களின் மீதான அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுவதும் என தனது கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக பிரதிபலித்துள்ளார். முதன்முறையாக இப்படி அவரை ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. சொல்லப்போனால் படத்தின் விறுவிறுப்பு இவரது கதாபாத்திரத்தால் தான் அதிகரிக்கிறது என்று சொல்லலாம்.

சிவகார்த்திகேயனின் தம்பியாக இளம் கன்று பயம் அறியாது என்று துள்ளிக் குதிக்கும் புரட்சிக்காரனாக அதர்வா. அவருக்கும் இந்த படம் ஒரு முக்கியமான மைல் கல் என்று சொல்லலாம். தன் அண்ணன் ஒரு அம்மாஞ்சி என்று நினைத்த வேலையில் அவன் தான் தங்களுக்கெல்லாம் தலைவன் என தெரிய வரும்போது அவரது ஆச்சரியம் நமக்கும் கூட தொற்றி கொள்கிறது.

படத்தின் நாயகியாக தெலுங்கு மொழியை பூர்வீகமாகக் கொண்ட, மத்திய அமைச்சரின் பெண்ணாக வரும் ஸ்ரீ லீலா தமிழ் மீது தீராத பற்று கொண்டவராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை திணித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போராட்டத்தில் அவர் ஈடுபடும் காட்சிகளில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்குமான காதல் காட்சி, அதில் ஸ்ரீ லீலாவின் நடிப்பு ரொம்பவே செயற்கை. மனதில் ஒட்டவே இல்லை.

சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் பசில் ஜோசப், தெலுங்கு நடிகர் ராணா ஆகியோர் புறநானூற்றுப்படை தோழர்களாக காட்சி தந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பாட்டியாக கொளப்புள்ளி லீலா மற்றும் தமிழக முதல்வர், இந்திய பிரதமராக நடித்தவர்கள், மத்திய எம்பியாக நடித்துள்ள ஆனந்த் உள்ளிட்ட பலரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிக பொருத்தமான தேர்வு என நிரூபித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை தான் நம்மை ரொம்பவே ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும் அண்ணாத்துரையின் கலை இயக்கமும் சேர்ந்து படம் நடக்கும் அந்த 60களின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன.

இயக்குனர் சுதா கொங்கரா ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து விட்டுப் போகாமல் செதுக்கியுள்ளார். எவ்வாறு இந்தி நம் மீது திணிக்கப்பட்டது, எந்த அளவிற்கு மேல் தமிழர்கள் பொறுமை இழந்தார்கள் என்பதை எல்லாம் துல்லியமாக இதில் காட்டி இருக்கிறார். இவ்வளவு எல்லாம் பார்த்து பார்த்து செய்தவர் சிவகார்த்திகேயன் தனது தம்பி அதர்வாவிற்கு செலவுக்கு காசு கொடுத்து அனுப்பும் ஒரு 20 ரூபாய் இப்போது புழக்கத்தில் உள்ள நோட்டு என்பதை கொஞ்சம் கவனிக்க தவறிவிட்டார்.

அதே சமயம் மொத்த படத்தையும் பார்க்கும்போது ஒரு பெண் இயக்குனர் இவ்வளவு பிரமாண்ட ஒரு ஆக்சன் படத்தை கொடுக்க முடியுமா என்று மீண்டும் ஒருமுறை நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார் சுதா கொங்கரா.

 

பராசக்தி ; மகா சக்தி

 

ரேட்டிங் ; 3.5 / 5

 

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading