நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வசனங்களே இல்லாத ஒரு படமாக வெளியாகி இருக்கிறது. இந்த காந்தி டாக்ஸ் மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் என்ன சொல்ல வருகிறது. ?
மும்பையில் நெருக்கடியான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விஜய் சேதுபதி, நோயாளி அம்மாவை கவனித்துக் கொள்ள போராடுகிறார். இன்டர்வியூக்களில் புறக்கணிக்கப்பட்டு வேலை கிடைக்காமல் விரக்தி அடைகிறார். அதே சமயம் எதிர் வீட்டில் இருக்கும் வசதியான அதிதி ராவ் ஹைதரியுடன் காதல் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் மும்பையில் இருக்கும் தொழிலதிபர் அரவிந்த்சாமி அடுத்தடுத்து குடும்பத்தில் இருக்கும் தனது உறவுகளை இழக்கிறார். சதியின் காரணமாக தனது சொத்துக்களை இழந்து அவரது வீடும் ஜப்தி செய்யப்படும் நிலைக்கு வருகிறது.
இந்த விவரங்கள் தெரியாத விஜய் சேதுபதி பணக்காரராக அரவிந்த் சாமியை பார்த்ததை தொடர்ந்து தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் திருட முடிவு செய்து அரவிந்த்சாமியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே அவர் நினைத்ததை நடத்த முடிந்ததா ? இல்லையா ? தன் வீடு தன்னை விட்டு கை நழுவிப் போகும் நிலையில் அந்த வீடு யாருக்கும் சேரக்கூடாது என்பதற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார் அரவிந்த்சாமி. அது என்ன ? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதி படம்.
பக்கம் பக்கமாக வசனம் பேசுவது என்றால் விஜய் சேதுபதிக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆனால் இந்த படத்தில் வசனமே பேசாமல் முகபாவங்களிலும் சில நேரங்களில் சைகைகளிலுமே வெளிப்படுத்த வேண்டிய சவாலான வேலையை எளிதாக சாதித்து இருக்கிறார். வேலை கிடைக்காத நிலை, அதனால் ஏற்படும் விரக்தி, திருடும் எல்லைக்கு செல்வது, காதலி தன்னை விட்டு கை நடுவில் போகக்கூடாது என முயற்சிப்பது, அதற்கு தேவை பணம் என முடிவு செய்வது என ஒவ்வொரு சிக்கலான சூழ்நிலையும் அழகாக அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அரவிந்த்சாமியின் வீட்டிற்குள் நுழைந்து அவர் பணம் பெறுத முயற்சிக்கும் காட்சிகள் காமெடி கலந்த திக் திக்.
பெரும் செல்வந்தனாக இருந்து உறவுகள் மற்றும் பணத்தை பறிகொடுக்கும் ஒரு தொழிலதிபரின் மனநிலையை அரவிந்த்சாமி அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ்சில் தனது வீடு யாருக்கும் செல்லாமல் இருக்க அவர் செய்யும் காரியம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த இருவரை தவிர சம்பந்தமே இல்லாத ஒரு பிக்பாக்கெட் திருடன் இருந்தாலும் அந்த வீட்டிற்குள் நுழைந்து கொஞ்ச நேரம் கலகலப்பு கூட்ட முயற்சித்து இருக்கிறார்.
காதலியாக வரும் அதிதி ராவ் ஹைதரி ஒரு பக்கம் குடும்பத்தின் அழுத்தம், இன்னொரு பக்கம் காதலை விட முடியாமல் தவிப்பது, அதே சமயம் காதலன் தவறான வழிக்கு போகாமல் தடுப்பது என தன் பங்கிற்கு செய்யும் முயற்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
விஜய் சேதுபதி குடியிருக்கும் அப்பார்ட்மெண்டுகளில் வசிப்பவர்களின் செயல்கள், அவர்களது குடும்ப சூழல் என அனைத்துமே மும்பைக்குள் நாமே வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இதற்கு ஒளிப்பதிவாளர் கரணின் கைவண்ணம் ரொம்பவே முக்கியம். ஏ.ஆர் ரஹ்மான் பின்னணி இசை இந்த பேசா படத்திற்கு துணை நின்று இருக்கிறது. கமர்சியலுக்காக சில பாடங்களை சேர்த்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கிறார். வசனங்கள் இல்லாமல் படம் இயக்குவது எவ்வளவு சிரமம் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதை முடிந்த அளவிற்கு ஈடுகெட்டி உழைத்திருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளில் வசனம் வெளிப்படுத்த வேண்டிய சூழல் இருந்தும் அதை நாசுக்காக கடந்து சென்று விடுகிறார். சாதாரண பாமர ரசிகர்களுக்கு இந்த படம் எந்த அளவிற்கு கதையை புரிய வைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல புதிய முயற்சி என்பது தான் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டுகளை தாராளமாக சொல்லலாம்.









Leave a Reply