அம்புலி மாமா, பால மித்ரா போன்ற எண்பதுகளில் வெளியான சிறுவர் நாவல்களில் படித்த மாயாஜால கதைகளை இன்றைய குழந்தைகள் ரொம்பவே மிஸ் செய்வார்கள். அப்படி ஒரு கதையை படமாகவே கொடுத்தால் எப்படி இருக்கும். அதுதான் இந்த கிராணி.
வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்து செட்டில் ஆகலாம் என்று மனைவி, வாய் மற்றும் காது கேட்காத வாய் பேசாத இரண்டு குழந்தைகளுடன் கிராமத்துக்கு வருகிறார் அனந்த் நாக். அந்த ஊரில் மிகப் பெரிய பழமையான பங்களா ஒன்றையும் விலைக்கு வாங்குகிறார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக வயதான பாட்டியான வடிவுக்கரசி அந்த வீட்டிற்கு வந்து மயக்கம் போட்டு விழ அவரை அங்கேயே தங்க வைத்து பராமரிக்கிறார் அனந்த் நாக்.
ஆனால் அதன்பின் தான் தெரிய வருகிறது எண்பது வயதான அந்த பாட்டி தனது இளமைப் பருவத்தை மீட்டெடுப்பதற்காக மூன்று குழந்தைகளை கொன்று அவர்களின் இதயத்தை பொறித்து சாப்பிடுவதற்கு தயாராக வந்திருக்கிறார் என்பது. இந்த விஷயம் அனந்த் நாக் தம்பதிக்கு தெரியாவிட்டாலும் அந்த ஊர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் திலீபனுக்கு ஒரு வழக்கு விசாரணையின் போது தெரிய வருகிறது.
வடிவுக்கரசி தான் நினைத்ததை திட்டமிட்டு சாதித்தாரா ? அனந்த் நாக், வடிவுக்கரசியிடம் இருந்து தனது குழந்தைகளை காப்பாற்றினாரா ? வடிவுக்கரசி குறித்து தெரிந்து கொண்ட திலீபன் அவரது முயற்சியை முறியடித்தாரா என்பது விறுவிறுப்பான மீதி கதை.
படத்தின் நாயகன் ஆனந்த் நாக் ஒரு யதார்த்தமான இளம் குடும்பத் தலைவனாக, பாசமுள்ள அப்பாவாக, எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் கொண்டவராக, எதையும் எளிதில் நம்பி விடுபவராக அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை அழகாக போர்த்திக் கொண்டுள்ளார். அவரது மனைவியாக நடித்துள்ளவரும் பாந்தமாக நடித்திருக்கிறார்.
படத்தின் உண்மையான கதாநாயகன் என்று சொன்னால் அது வடிவுக்கரசியை தான் சொல்ல வேண்டும். 80 வயது பாட்டியாக வித்தியாசமான முகச்சுருக்கம் கொண்ட, கொஞ்ச நேரம் தொடர்ந்து பார்த்தால் சற்றே அருவருக்கத்தக்க தோற்றத்துடன் படம் முழுவதும் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார். தன்னை காப்பாற்றியவர்களின் பங்களாவில் தங்கிக் கொண்டு அவர்களின் குழந்தைகளையே அவர் கொல்ல துடிப்பதும் அந்த குழந்தைகள் அவரிடமிருந்து தப்பிப்பதும் என ஒரு ஆடு புலி ஆட்டத்தை அழகாக ஆடியிருக்கிறார் வடிவுக்கரசி.. குறிப்பாக தன்னுடைய மேக்கப்பிற்காக அவர் மெனக்கட்டிருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.
வத்திக்குச்சி திலீபன் போலீஸ் அதிகாரியாக கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரும் கான்ஸ்டபிள் சிங்கம்புலியும் சேர்ந்து வடிவுக்கரசியிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற நடத்தும் போராட்டம் பதைபதைக்க வைக்கிறது. அதிலும் சிங்கம்புலி எடுக்கும் இறுதி முடிவு நம்மை கண்கலங்க வைத்து விடுகிறது.
கிராமத்து பெரியவராக வரும் கஜராஜ் ஜாதி வெறி பிடித்தவரோ என நினைக்க வைத்தாலும் கூட எல்லோருக்கும் நல்லது கெட்டது பார்க்கும் ஒரு சராசரி மனிதராக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரே பங்களாவிற்குள் கதை நடப்பது கொஞ்சம் அலுப்பை தந்தாலும் கூட அடுத்து என்ன நடக்குமோ. வடிவுக்கரசி என்ன செய்வாரோ. குழந்தைகள் தப்பிப்பார்களா என காட்சிக்கு காட்சி ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தி நம்மை இயற்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறார்.இயக்குனர்.









Leave a Reply