கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியாக வெளியான கட்டா குஸ்தி பார்ட் 2, திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் இருந்து கதையைத் தொடங்குகிறது. குஸ்தி வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்யா லெட்சுமி தனது விளையாட்டு வாழ்க்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் ஹவுஸ் ஹஸ்பென்டாக விஷ்ணு விஷால் இருக்கிறார்.
இதற்கிடையே, மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
இறுதியில் இந்த தம்பதி மீண்டும் இணைந்தார்களா, குடும்பமும் கனவும் இரண்டையும் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை. நீதிமன்றக் காட்சிகள் உள்ளிட்ட பல திருப்பங்களுடன் இந்தக் குடும்பப் பிரச்சினையை படம் அணுகியிருக்கிறது,
நாயகன் விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் ஹவுஸ் ஹஸ்பண்ட் கதாபாத்திரத்தை மிக இயல்பாக கையாண்டிருக்கிறார். மகளுடன் வரும் காட்சிகளில் மனதைத் தொடும் வகையில் நடித்திருக்கும் அவர், மனைவி மீதான அன்பையும் குடும்பத்திற்காகப் போராடும் உணர்வுபூர்வமான தருணங்களையும் அனுபவமிக்க நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா லெட்சுமியோ இந்தப் படத்தில் முதல் பாகத்தை விட வலிமையான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். குஸ்திக் களத்தில் முரட்டுத் தன உடல் மொழி கொண்ட வீராங்கனையாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் இரு வேறு பரிமாணங்களில் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், குறிப்பாக க்ளைமாக்ஸ் குஸ்திக் காட்சிகளில் அவரது உழைப்பு பாராட்டத்தக்கது.
மற்ற நடிகர்களைப் பொறுத்தவரை, நீதிமன்றக் காட்சியில் நீதிபதியாக சிறப்புத் தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் தன் அதிரடி வருகையால் கவனம் ஈர்க்கிறார். போட்டி வர்ணனையாளராக வரும் யோகி பாபு தன் வழக்கமான டைமிங் காமெடி மூலம் சிறு காட்சிகளிலும் நகைச்சுவையை கூட்டுகிறார்.
ஆணாதிக்க மாமாவாக நடித்த கருணாஸ், குறிப்பாக ஆசிரியர்-நீதிமன்றக் காட்சிகளில் தன் வழக்கமான நகைச்சுவை உத்திகளால் சிரிப்பை வரவழைக்கிறார். அவருக்கு இணையாக லிசி ஆண்டனி துல்லியமான நடிப்பால் கவனம் பெறுகிறார். காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த இடங்களில் நகைச்சுவையை சரியாகக் கையாண்டு படத்திற்குப் பலம் சேர்க்கின்றனர். இரண்டாவது கதாநாயகியான மோக்ஷா, டீச்சர் கதாபாத்திரத்தில் இளமைத் துள்ளலுடன் கலகலப்பை ஏற்படுத்தி, பாடல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்தின் பின்னணி இசையை திரைக்கதையின் நகர்வுக்கு ஏற்ப சிறப்பாக கையாண்டிருக்கிறார். ‘சம்பவக்காரி’, ‘மகராசி’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன, மேலும் கிராமிய மற்றும் நவீன இசைக்கலவை கதைக்களத்திற்குப் பலம் சேர்க்கிறது; பின்னணி இசை குடும்பக் காட்சிகளில் மென்மையாகவும், குஸ்திக் காட்சிகளில் எனர்ஜியூட்டும் விதத்திலும் அமைந்திருப்பதே இதன் பலம்.
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் படம் முழுவதையும் கண்கொள்ளாக் காட்சிகளாக அமைத்திருந்தாலும், துருத்திக் கொண்டு தெரியாத வகையில் அவசியமான ஒளிப்பதிவை மட்டுமே தந்திருக்கிறார் என்பதால் தனித்து பாராட்டப்படும் அளவுக்கு பிரத்யேகமாக ஒன்றும் இல்லை என்பதே ஒரு சிறு குறையாகச் சொல்லலாம்.
இயக்குனர் செல்லா அய்யாவு, முதல் பாகத்தின் முடிவில் நாயகன் சொன்ன ஒரு சிறு வசனத்தை அடிப்படையாக வைத்து, முழுமையான ஒரு திரைக்கதையை கட்டமைத்திருக்கிறார். போட்டியில் ஒருவர் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்ற திரைக்கதையின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகப் போகாமல், அந்த முடிச்சை நுணுக்கமாக அவிழ்த்த விதம் புத்திசாலித்தனமானது. காமெடி, சென்டிமெண்ட், குஸ்தி, பெண்ணுரிமை பேசும் காட்சிகள் என ஒவ்வொரு அம்சத்தையும் சமநிலையுடன் தொடர்ச்சியாக கோர்த்திருப்பது இயக்குனரின் கைத்திறமையை காட்டுகிறது.
இருப்பினும், படத்தின் இறுதிக் கட்டத்தில் ஹீரோயினின் தனிப்பட்ட இலக்கு எப்படி நிறைவேறியது என்பதை போதுமான அளவு விளக்காமல் விட்டது ஒரு பலவீனமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், மேலோட்டமாகப் பார்த்தால் அப்பா-பொண்ணு சென்டிமெண்ட் சற்று அதிகமாகவே தோன்றுகிறது என்ற கருத்தும் உண்டு. ஆனாலும், லாஜிக்கை ஒதுக்கிவைத்து குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் மனநிலையில் பார்த்தால், கட்டா குஸ்தி 2 ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்திருக்கிறது.









Leave a Reply